×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான கனகராஜின் உறவினர்களுக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோடாநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை  வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கோடநாடு கொலை கொள்ளை வழக்குகளுடன் தொடர்புடைய சாட்சியங்களைக் கலைத்து ஆதாரங்களை அழித்ததாக கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் ஜாமீன் வழங்கிய நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், இருவரும் ஊட்டியிலேயே தங்கியிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென்று நிபந்தனை விதித்திருந்தது.  இந்நிலையில் ஊட்டியில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக் கோரி தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஊட்டியில் தங்குவதால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுதாரர்கள் இருவரும் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15ம் தேதிகளில் மட்டும் காலை 10.30 மணிக்கு சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டார். நீலகிரி நீதிமன்றத்திடம் அனுமதி பெறாமல், இருவரையும் காவலில் வைத்து விசாரிக்க கூடாது என்று காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Kanagaraj ,Kodanadu , Kodanadu murder, robbery case, relaxation of bail conditions, ICourt orders
× RELATED பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...