×
Saravana Stores

கோயம்பேடு பேருந்து நிலைய வளாக கடைகளில் புளியோதரை விலை ரூ.80: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: சென்னை கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடையில் புளியோதரை, சாம்பார் சாதம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை  கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்கள், மாவட்டங்களுக்கு விரைவு பஸ்களும்  சென்னை உள்பட பல பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.  இங்கு தினமும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.  பயணிகள் வசதிக்காக பஸ் நிலைய வளாகத்தில் ஏராளமான ஓட்டல்கள், டீக்கடைகள்  மற்றும் புத்தக கடைகள் உள்ளன. ஆனால் இங்குள்ள கடைகளில் அனைத்து  பொருட்களும் பல மடங்கு விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட  பயணிகள் சிலர் கூறியதாவது:ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் கோயம்பேடு  பேருந்து நிலையத்தில் எல்லா பொருட்களின் விலையும் மிக அதிகமாக விற்கப்படுகிறது. பஸ்  நிலையத்தில் 4வது பிளாட்பாரத்தில் உள்ள ஒரு தோசை கபேயில் புளியோதரை80  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு சாப்பிட சென்றால், முதலில் பில்  வாங்க வேண்டும். பணம் கட்டிய பிறகு பில் கொடுத்தால்தான் சாப்பாடே வழங்கப்படுகிறது. இப்படி ஒருவர் பில் போடும்போது புளியோதரை 80 ரூபாய்  என்றதும் கடும் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

இதுபோல் சாம்பார் சாதமும் 80ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு காபியின் விலை 22 ரூபாய். பில்  கவுன்டரில் இருந்தவரிடம், ‘ஏன் ஐயா இவ்வளவு விலைக்கு விற்கிறீர்கள்.  
உட்கார்ந்து சாப்பிடுவதற்கு கூட வசதி இல்லையே’ என்று வாடிக்கையாளர்கள்  கேட்டதற்கு, கடை ஊழியர், ‘இந்த பஸ் ஸ்டாண்டுல எல்லாமே இவ்வளவு விலைதான்,  காசு இருந்தா சாப்பிடு இல்லன்னா கிளம்புங்க... ஒவ்வொரு ஆளுக்கும் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா நா பொழப்ப பார்க்கிறது ரொம்ப கஷ்டம்னு’ கன்னத்தில் அறைந்தார்போல  பதில் வருகிறது.

ஏழை மக்கள் முதல் பணக்காரர்கள் வரை வந்து செல்லும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள  ஓட்டல்களில் நடக்கும் இந்த கட்டண கொள்ளையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடுத்து  நிறுத்தவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Goyambedu , Koyambedu bus stand, Pulyotharai price, public shocked
× RELATED கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில்...