×

பெருங்களத்தூர் ரயில்வே கேட் பகுதியில் ஆமை வேகத்தில் மேம்பால பணிகள்: நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்

தாம்பரம்: பெருங்களத்தூர் பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், கடும் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை ஆகிய பகுதியில் சுமார் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கம் வசித்து வருகின்றனர். இதில் பெருங்களத்தூர் பகுதியில் இருந்து பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள காவல் நிலையம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளி, மயானம், ஜிஎஸ்டி சாலை, பெருங்களத்தூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும், பீர்க்கன்காரணை பகுதியில் இருந்து பெருங்களத்தூர் பகுதியில் உள்ள கோயில், கடை வீதிகளுக்கு செல்லவும் அப்பகுதி மக்கள் பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் 32, 33 ஆகிய இரண்டு ரயில்வே கேட் வழியாகத்தான் சென்று வந்தனர்.

இந்த ரயில்வே கேட்கள் அடிக்கடி மூடப்படுவதால், இருபுறமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், வேலைக்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லுபவர்கள் சிலர் ரயில்வே கேட்டை கடந்து செல்லும்போது அவ்வழியாக வரும் ரயில்களில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வந்தது.

இதனால் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களின் தொடர் கோரிக்கையையடுத்து லெவல் கிராசிங் 32 கடவுப்பாதையில் கடந்த 2015 ஜூலையில் புதிய சுரங்க மேம்பாலம் கட்டுவதற்கு முடிவுசெய்து அந்த கடவுப்பாதை நிரந்தரமாக மூடப்பட்டது.
இதனால் அருகில் உள்ள லெவல் கிராசிங் 33 ரயில்வே கடவுப்பாதை வழியாக மட்டுமே தினமும் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லுபவர்கள் என அனைத்து பொதுமக்களும் சென்று வருகின்றனர்.இவ்வாறு ஒரே கடவுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால், அப்பகுதியில் எந்த நேரமும் கூட்ட நெரிசலாக காணப்படுகின்றது. இவ்வாறு காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான கூட்டநெரிசல் ஏற்படும் நேரங்களில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் வரும் நேரங்களில் ரயில்வே கேட் மூடப்படுகிறது.

இவ்வாறு மூடப்படும் ரயில்வே கேட் சுமார் 20 முதல் 35 நிமிடங்கள் கழித்துதான் திறக்கப்படுகிறது. இதனால், கடவுப்பாதையின் இரு புறங்களிலும், போக்குவரத்து ஸ்தம்பித்து, பொதுமக்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில்வேக்கு சம்பந்தப்பட்ட பகுதியில் பணிகள் நடைபெற்று சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்தது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் பணிகள் முறையாக நடைபெறாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்ததுடன் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு சார்பில் உத்தரவுவிடப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்தனர்.

இதில் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் ரயில் நிலையம் அருகே மேம்பால ரவுண்டானா அமைப்பதற்கு தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல ரயில் நிலையத்தில் இருந்து பெருங்களத்துார், காமராஜர் நெடுஞ்சாலையை நோக்கி பாலம் மற்றும் நெடுங்குன்றம் பகுதிக்கு செல்லும் சாலையிலும் பாலம் கட்டப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளால் தொடர்ந்து தினமும் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதில் கடந்து சில நாட்களுக்கு முன்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில்வே கேட் திறக்காததால் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கண்டித்து சமீபத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தினமும் ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதுபோன்ற விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் சிரமப்படுவதை தவிர்க்க மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Perungalathur , Flyover work at Perungalathur railway gate at a snail's pace: motorists stuck in traffic
× RELATED தூக்குப்போட்டு கணவர் தற்கொலை...