×

மகளிர் பிட்னெஸ் மாடல் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் கோவை பெண்-வியட்நாம் போட்டியில் பங்கேற்க உதவி எதிர்பார்ப்பு

அன்னூர் :  மகளிர் பிட்னெஸ் மாடல் போட்டிகளில் கோவை பெண் பதக்கங்களை குவித்து வருகிறார்.ஆணுக்கு, பெண் சமம் என்பதை பெண்கள் நிரூபித்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் தடம் பதித்த பெண்களில் பலர் வெற்றிக்கனியை ருசித்து வருகின்றனர்.இந்நிலையில் இரு குழந்தைகளுக்கு தாயான கோவையை சேர்ந்த பெண் ஒருவர், மகளிர் பிட்னெஸ் மாடலாக தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வென்று சப்தமில்லாமல் சாதனை வருகிறார்.

கோவை குரும்பபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி(37). இத்தம்பதிக்கு இரு குழந்தைகள்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர், ஊராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வி விபத்தில் சிக்கி காலில் படுகாயமடைந்தார். இதனால் வீட்டில் இருந்ததால் தமிழ்செல்விக்கு உடல் எடை கூட ஆரம்பித்துள்ளது. இதனை குறைக்க உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற அவர் அங்கு தனது உடலை வருத்தி எடையை குறைத்தார்.

இரண்டாண்டுகளாக தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டதன் பலனாக, மாநில அளவில் நடைபெற்ற  மகளிர் பிட்னெஸ் மாடல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்தார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் வேர்ல்ட் பிட்னெஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார். மேலும் தமிழ்ச்செல்வி தாய்லாந்தில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வேர்ல்ட் பிட்னெஸ் பெடரேஷன் சார்பில் வியட்நாமில் மகளிர் பிட்னெஸ் மாடல் போட்டி நடைபெற உள்ளது.இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழ்ச்செல்வி காலை,மாலை என இரு வேளைகளிலும் தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக சரியான உணவு பழக்க,வழக்கங்கள் வேண்டும்.

இந்த நிலையில் போட்டியில் கலந்து கொள்ள பயணச்செலவு, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கு பணமின்றி தவித்து வருகிறார் தமிழ்ச்செல்வி.
இதனால் தமிழக அரசு இப்போட்டியில் கலந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் என தமிழ்ச்செல்வி கோரிக்கை விடுத்துள்ளார்.அவ்வாறு செய்யும் பட்சத்தில் தன்னால் நிச்சயம் இந்தியாவிற்காக, உலக அளவில் பதக்கங்களை வென்று சாதிக்க முடியும் என தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

Tags : Coimbatore ,Vietnam , Annoor : Coimbatore women are collecting medals in women's fitness model competitions. Men and women are equal.
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...