×

மோடி, அமித்ஷா சந்திக்க மறுப்பு; டெல்லி பயணத்தை பாதியில் முடித்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய எடப்பாடி: இடைக்கால பொது செயலாளராக தேர்வானதும் மேற்கொண்ட முதல் பயணமே தோல்வி அடைந்ததால் கடும் விரக்தி

சென்னை: டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க மோடி, அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை. இதனால், கடும் விரக்தி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி தனது டெல்லி பயணத்தை பாதியில் முடித்து கொண்டு அவசரம், அவசரமாக இன்று சென்னை திரும்பினார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். தொடர்ந்து அவருடன் சம்பந்தப்பட்டவர்களை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் அதிரடியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகளை நீக்கினார். நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். எனவே, கட்சியில் ஒருவரை நீக்கவும், சேர்க்கவும் எனக்கு தான் அதிகாரம் உண்டு என்று கூறி வருகிறார். இதனால் இபிஎஸ், ஓபிஎஸ் நடவடிக்கை அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்லலாம் என்று நினைத்து இருந்தார். அதற்கும் ஓபிஎஸ் தடை போட்டார். இந்த பரபரப்புக்கு மத்தியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அவருக்கு பிரிவு உபசார விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி கடந்த 22ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் போது அதிமுக முக்கிய நிர்வாகிகளான கே.பி.முனுசாமி உள்ளிட்ட தலைவர்களை அழைத்து செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மூத்த தலைவர்களை புறக்கணித்து விட்டு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சிலரை மட்டும் அழைத்து சென்றார்.

இதனால், மூத்த தலைவர்கள் எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி அங்கு 5 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டிருந்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை  தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச நேரம் கேட்டிருந்தார்.  அப்போது, “தமிழகத்தில் தான் முதல்வராக இருந்தபோது, பல்வேறு பணிகளுக்கு  கான்ட்ராக்ட் விடப்பட்டது. தற்போது அந்த கான்ட்ராக்டர் வீடுகள் மற்றும்  அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல  ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதுபோன்று, முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள், அவரது  உறவினர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  இதுபோன்ற சோதனைகளை நிறுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை  வைக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். மேலும், அதிமுக இடைக்கால  பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டும் முழுமையாக செயல்பட  முடியவில்லை.

இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நீதிமன்றம், தேர்தல்  ஆணையத்தில் புகார் கொடுத்து வருகிறார். இந்த விசாரணைகள் முடிந்த பிறகுதான்  அதிமுக முழுமையாக தன் கைவசம் வரும் சூழ்நிலை உள்ளது.  ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக நிர்வாகிகள் ஆதரவு இல்லை. 95  சதவீதத்துக்கும் மேல் நிர்வாகிகள் தனக்கு ஆதரவு உள்ளது. அதனால், கட்சியில்  ஓ.பன்னீர்செல்வம் எந்த குறுக்கீடும் செய்யாமல் இருக்க உதவ வேண்டும் என்றும்  பிரதமர் மோடியிடம் நேரில் புகார் அளிக்க எடப்பாடி முடிவு செய்திருந்தார். நீங்கள் ஆதரவு தெரிவித்தால் கட்சி முழுமையாக தன்  கட்டுப்பாட்டில் வரும். அப்போதுதான் பாஜ கூட்டணி வலிமையாக இருக்கும்  என்றும் மோடியிடம் புகார் செய்ய திட்டமிட்டுள்ளார். இதுதவிர, அதிமுக  கட்சியை தன்வசம் முழுமையாக கொண்டு வர இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும்  சில உயர் அதிகாரிகளையும் எடப்பாடி பார்ப்பார்’’ என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழா நேற்று நடந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது பிரதமரை கையெடுத்து கும்பிட்டு வணக்கம் மட்டும் தெரிவித்தார். அதற்கு பதிலுக்கு பிரதமர் கும்பிட்டார். வழக்கமாக ஓபிஎஸ், இபிஎஸ் பிரதமரை பார்க்க டெல்லி சென்றால் பிரதமர் மோடி அவர்களை கைக்குலுக்கி, கட்டி அணைத்து வரவேற்பது வழக்கம். ஆனால், வெறும் வணக்கத்துடன் எடப்பாடியை மோடி கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். இதை பார்த்து எடப்பாடி கடும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச நேரம் கேட்டு இருந்தார். அதற்கும் அவர்கள் இருவரும் நேரம் ஒதுக்கவில்லை. பல முறை முயற்சித்தும் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி ஏமாற்றமடைந்தார். மேலும் தனது பயணம் தோல்வியில் முடிந்து விட்டதே என்றும் அவர் கருதினார்.

இதனால், அதிருப்தியில் இருந்த எடப்பாடி பழனிசாமி புதிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவையும் புறக்கணித்து விட்டு அவசரம், அவசரமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு இன்று சென்னை திரும்பினார். எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை, அதிமுக வங்கி கணக்குகளை  முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ், ஆர்பிஐக்கு கடிதம் எழுதியிருப்பது, நீதிமன்றத்தில் மேல் முறையீடு என்ற அடுத்தடுத்த சம்பவங்களால் எடப்பாடி பழனிச்சாமி அப்செட் அடைந்து அவர் சென்னை திரும்பியுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் டெல்லி வந்தேன்” என்றார். அ.தி.மு.க. வங்கிக் கணக்கை முடக்க வேண்டுமென ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த கேள்விகளை தவிர்க்க வேண்டும். அதற்கு தற்போது பதில் அளிக்க முடியாது என்றார்.

Tags : Modi ,Amit Shah ,Edappadi ,Chennai ,Delhi ,general secretary , Modi, Amit Shah refuse to meet; Edappadi returned to Chennai disappointed after completing his trip to Delhi halfway: He was disappointed as his first trip after being selected as interim general secretary was a failure.
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...