புதுடெல்லி: தேசிய திரைப்பட விருதுகளில், தமிழ் சினிமா 10 விருதுகளை பெற்று அசத்தி உள்ளது. அதிகபட்சமாக ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது. இதில் நடித்த சூர்யா சிறந்த நடிகருக்கான விருதுக்கும், கதாநாயகி அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகையாகவும் தேர்வாகி உள்ளனர்.
இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்பு மிகுந்த விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள், ஆண்டுதோறும் சிறந்த நடிகர்கள், நடிகைகள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
இந்தியா முழுவதும் உள்ள 30 மொழிகளில் வெளியான 305 படங்கள் விருதுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மொத்தம் 5 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இதில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன், ‘தி அன்சங் வாரியர்’ என்ற இந்திப் படத்தில் நடித்த அஜய் தேவ்கனுக்கும் சிறந்த நடிகருக்கான விருது பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
சிறந்த நடிகை விருது, ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகையான அவர், இதற்கு முன்பு ‘8 தோட்டாக்கள்’, ‘சர்வம் தாள மயம்’, ‘தீதும் நன்றும்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது, படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் அறிவிக்கப்பட்டது. மேலும், சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் ‘சூரரைப்போற்று’ தட்டிச் சென்றுள்ளது.
இதே போல, வசந்த் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதையும், இப்படத்தின் படத் தொகுப்பாளர் கர் பிரசாத்துக்கு சிறந்த படத் ெதாகுப்புக்கான விருதும், நடிகை லட்சுமிப்பிரியா சந்திரமவுலிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது. இத்துடன் சேர்த்து இதுவரை கர் பிரசாத் 8 தேசிய விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த வசனத்துக்காக யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. மேலும், இப்படத்துக்காக அவருக்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது. இதன் மூலம், 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா வென்றுள்ளது.
மலையாளத்தில் வெளியான ‘ஐயப்பனும் கோஷியும்’ திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த ஸ்டண்ட் இயக்குநர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த துணை நடிகர் ஆகிய 4 விருதுகளை பெற்றுள்ளது. இப்படத்தை இயக்கிய மறைந்த கே.ஆர்.சச்சிநாதனந்தன் சிறந்த இயக்குநர் விருதுக்கும், சண்டைக் காட்சிகளை அமைத்த ராஜசேகர், மாபியா சசி, சுப்ரீம் சுந்தர் ஆகியோர் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருதுக்கும், இப்படத்தில் ‘களக்காத்த சந்தனமேரம்’ பாடலை பாடிய நாட்டுப்புற பாடகி நஞ்சம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகி விருதுக்கும், இப்படத்தில் நடித்த பிஜூ மேனன் சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கும் தேர்வாகி உள்ளனர். சிறந்த இசை அமைப்பாளர் விருது தெலுங்கில் வெளியான ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ படத்தின் இசை அமைப்பாளர் தமனுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ‘மீ வசந்தராவ்’ என்ற மராத்தி படத்துக்காக ராகுல் தேஷ் பாண்டேவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறந்த மலையாளப் படமாக ‘திங்களாச்ச நிச்சயம்’, சிறந்த தெலுங்கு படமாக ‘கலர் போட்டோ’, சிறந்த கன்னட படமாக ‘டோலு’, சிறந்த இந்தி படமாக ‘துளசிதாஸ் ஜூனியர்’, சிறந்த மராத்தி படமாக ‘கோஸ்தா ஏகா பைதானிச்சி’, சிறந்த பெங்காலி படமாக ‘அவிஜாத்ரிக்’, சிறந்த அசாமிய திரைப்படமாக ‘பிரிட்ஜ்’ ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெஸ்ட் புக் ஆன் சினிமா விருது, கிஸ்வர் தேசாய் எழுதிய ‘தி லாங்கஸ்ட் கிஸ்’ என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு உகந்த சிறந்த மாநிலமாக மத்தியப் பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது.