×

கொள்ளளவை அதிகரிப்பது தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகள் பூண்டி ஏரியை ஆய்வு: விவரங்களை கேட்டறிந்தனர்; விரைவில் அறிக்கை தாக்கல்

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டிய ஏரியின் கொள்ளளவை அதிகரிப்பது தொடர்பாக, உலக வங்கி பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ஏரியின் நீர் மட்டத்தை உயர்த்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் மற்றும் தேர்வாய் கண்டிகை கண்ணன் கோட்டை ஆகிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. மழைக்காலங்களில் இந்த ஏரிகளில் சேமிக்கப்படும் நீர், ஆண்டு முழுவதும் சென்னை மக்களுக்கு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது. இதில், பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது.

கடந்த 2020-21ம் ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அதிகளவில் பெய்ததால் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது.  இதனால் உபரி நீர் திறக்கப்பட்டு அது வீணாக கடலில் சென்று சேர்ந்தது. இதனை தொடர்ந்து ஏரியின் நீர் மட்டத்தையும், நீர் இருப்பையும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இதனையடுத்து நீர் நிலைகளை மேம்படுத்துதல், சோழவரத்திலிருந்து செங்குன்றம் வரை பைப்லைன் அமைத்தல் மற்றும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீரை தேக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உலக வங்கியிடம் நிதி கேட்டதாக கூறப்படுகிறது.

தற்போது 3.23 டிஎம்.சி தண்ணீர் சேமித்து வைக்கக் கூடிய வகையில் பூண்டி நீர்த்தேக்கம் இருப்பதால் மேலும் 1.5 டிஎம்சி நீரை தேக்கி வைக்க ஏதுவாக நீர்த்தேக்கத்தை மேலும் 2 அடி உயரம் உயர்த்துவதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுப்பணித்துறை இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு  தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற் பொறயாளர் கோபாலகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் ஷட்டர்கள்களை ஆய்வு செய்தனர். மேலும் ஏரி ஏற்கனவே 35 அடி உயரம் உள்ளதை மேலும் 2 அடி  உயர்த்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, நேற்று உலக வங்கி பிரதிநிதிகள் சூபே தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் முரளிதரன், பொன்ராஜ், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், செயற்பொறியாளரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் உடன் சென்று நீர்நிலை குறித்த விவரங்களை எடுத்துரைத்தனர்.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியிலிருந்து ஸ்ரீசைலம் வழியாக கண்டலேறு வந்தடைகிறது. அங்கிருந்து பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைகிறது. மொத்தம் 406 கி.மீ. தூரம் கால்வாய் மூலம் இந்த தண்ணீர் கொண்டு வரப்படுகிறது என்ற விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உலக வங்கி அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர். அதேபோல், ஆந்திர மாநிலத்தில் அதிகளவில் மழை பெய்வதால் அங்குள்ள அம்மம்பள்ளி அணை நிரம்பியதும் அங்கிருந்து திறந்துவிடப்படும் நீரும் பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைகிறது.

கூவம் ஆற்றிலிருந்தும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருவது குறித்தும், பூண்டி நீர்த்தேக்கத்திற்கான நீர் ஆதாரங்கள் குறித்தும் உலக வங்கி பிரதிநிதிகள் கேட்டறிந்தனர். மேலும், பூண்டி நீர்த்தேக்கத்தை மேலும் 2 அடி உயர்த்தினால் அருகிலுள்ள கிராமங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா எனவும், பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதனை உயர்த்துவதற்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர். உலக வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்ததையடுத்து அவர்கள் தரும் அறிக்கையை அடுத்து நீர் நிலைகளை மேம்படுத்துவதற்கான நிதியை உலக வங்கி ஒதுக்கீடு செய்யும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* ரூ.65 லட்சத்தில் கட்டப்பட்டது
பூண்டி ஏரி சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சத்தியமூர்த்தியின் முயற்சியால், 14 ஜூன் 1944ம் ஆண்டு, ரூ.65 லட்சம் செலவில் கட்டி, திறக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, பூண்டி எனும் ஊரில் கொற்றலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

* 25 கி.மீ. கால்வாய்
ஆந்திரா - தமிழக அரசுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, 1983ம் ஆண்டு, தெலுங்கு கங்கை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. நீரை, தமிழகத்திற்கு, ஆந்திர மாநிலம் வழங்க வேண்டும். ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து சோமசீலா, கண்டலேறு அணை வழியாக, 406 கி.மீ. தொலைவு திறந்தவெளி கால்வாயில் பயணித்து, கிருஷ்ணா நீர் தமிழகம் வந்தடைகிறது. பின்பு, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ‘ஜீரோ பாயின்ட்’ என்ற இடத்திலிருந்து, பூண்டி ஏரிக்கு தண்ணீரை எடுத்துச் செல்ல, 25 கி.மீ., தூரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.

* மழை, கிருஷ்ணா நீர் வரத்தால், பூண்டி ஏரி நிரம்பினால், பேபி கால்வாய், முதன்மை கால்வாய்களின் மூலம், செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
* இந்த ஏரி அருகே அமைந்துள்ள தொல்பழங்கால வைப்பகத்தில், ஒன்றரை லட்சம் ஆண்டுகள் பழமையான கற்களால் ஆன ஆயுதங்களும் முதுமக்கள் தாழியும் உள்ளன.
* இந்த ஏரியை வெட்ட 10 கிராமங்களில் இருந்த மக்களை வெளியேற்றி, வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டனர். பூண்டி நீர்த்தேக்கத்தை மேலும் 2 அடி உயர்த்தினால் அருகிலுள்ள கிராமங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா எனவும், பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதனை உயர்த்துவதற்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர்.

Tags : World Bank ,Bundi Lake , World Bank representatives inspect Bundi Lake for capacity building: learn details; Report filed soon
× RELATED இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி பெறும்: உலக வங்கி