மாணவி இறப்புக்கு நீதிகேட்டு வாட்ஸ்அப் குழு பிரசாரம் எதிரொலி மாணவர்களின் போராட்டத்தை தடுக்க பச்சையப்பன் கல்லூரியில் போலீஸ் குவிப்பு: மெரினாவிலும் தீவிர கண்காணிப்பு

சென்னை:  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மாணவியின் உடலை வாங்க மறுத்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பள்ளி முன்பு அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டம் திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் முடிந்தது.

இதனால் மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளி மற்றும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. இதுகுறித்து சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி முன்பு ஒன்று கூடுவோம் என மாணவர்கள் சிலர் வாட்ஸ் அப் குழு மூலம் பிரசார அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உளவுத்துறை அளித்த தகவலின் படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி முன்பு நேற்று காலை முதல் மாலை வரை உதவி கமிஷனர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கீழ்ப்பாக்கம் முதல் அரும்பாக்கம் அண்ணா ஆர்ச் வரை  உள்ள ஈவெரா சாலையிலும் மாணவர்களின் போராட்டங்களை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், போலீசார் எடுத்த துரித நடவடிக்கையால் மாணவர்கள் போராட்டம் தடுக்கப்பட்டது.

மேலும், பச்சையப்பன் கல்லூரி முதல்வரிடம் போலீசார் வாட்ஸ் அப் குழு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் வாட்ஸ் அப் குழு அமைத்த மாணவர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், 3வது நாளாக மெரினா கடற்கரையில் மாணவர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் காமராஜர் சாலையில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையை இணைக்கும் 7 வழித்தடங்களிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: