×

ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் தவறவிடும் வைபை டெபிட் கார்டுகளை திருடி பணம் அபேஸ் செய்தவர் கைது: ஷாப்பிங், ஓட்டல், மதுபானம் என உல்லாச வாழ்க்கை நடத்தியது அம்பலம்

அம்பத்தூர்: ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் தவறவிடும் வைபை டெபிட் கார்டுகளை திருடி உல்லாச வாழ்க்கை நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.அம்பத்தூர் பாடி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர், கொளத்தூரில்  டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி இரவு 9.30 மணிக்கு, இவரது செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், அவரது வைபை டெபிட் கார்டை பயன்படுத்தி, ஒரு கடையில் 1000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த சரவணன் உடனடியாக தனது டெபிட் கார்டை தேடியபோது, காணாமல் போனது தெரியவந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்து பிரபல துணிக்கடை மற்றும் ஓட்டல்களில் சரவணனின் வைபை டெபிட் கார்டை பயன்படுத்தி, பொருட்கள் வாங்கியதாக அவருக்கு எஸ்எம்எஸ் வந்தது. மறுநாள் காலை இதுபற்றி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், அவரது டெபிட் கார்டை பயன்படுத்தி, அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கியதாக மீண்டும் எஸ்எம்எஸ் வந்தது. உடனே அவரது  வங்கியை தொடர்புகொண்டு தொலைந்து போன தனது டெபிட் கார்டை பிளாக் செய்துள்ளார்.

அதன்பேரில் போலீசார், சம்பந்தப்பட்ட துணிக்கடை, ஓட்டல் மற்றும் டாஸ்மாக் கடைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர். அதில், பாடி அடுத்த மண்ணூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (31) என்பவர், சரவணனின் டெபிட் கார்டு மூலம் பணம் அபேஸ் செய்தது தெரியவந்தது. அவரை நேற்று பிடித்து விசாரித்தனர்.  அதில், ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் தவறவிட்டு செல்லும் வைபை டெபிட் கார்டுகளை இவர் எடுத்துச் சென்று, அதனை பயன்படுத்தி ஷாப்பிங் மால், ஓட்டல், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவற்றில் பொருட்களை வாங்கி உல்லாச வாழ்க்கை நடத்தி வந்ததும்,  கடந்த 10ம் தேதி திருமுல்லைவாயல் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த தீபா என்பவரின் வைபை கார்டை திருடி ரூ79 ஆயிரம் அபேஸ் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10க்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகள், ரூ4 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Tags : Ambalam , Man arrested for stealing Wi-Fi debit cards that customers miss at ATMs and cash apes: shopping, hotel, liquor Ambalam led a merry life
× RELATED இளம் தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.50...