×

திருத்தணி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு 5 நாட்களும் 24 மணி நேரமும் அன்னதானம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (19.07.2022) திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.    இத்திருக்கோயிலில் உள்ள நல்லான்குளம், படிக்கட்டுகள், சித்த மருத்துவமனை, திருக்குளம், திருத்தேர் பணிகள், காதுகுத்தும் மண்டபம் ஆகிய இடங்களை பார்வையிட்டு மேற்கொள்ளபட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

இந்த ஆய்விற்குபின் அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது, இத்திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழாவின்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இதர மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை தேவைகள், போக்குவரத்து வசதிகள், பக்தர்கள் தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையை தவிர்ப்பது, கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள், சுகாதாரம் பேணி காக்க படுவதற்காக குப்பைகளை தொடர்ந்து அகற்றுதல், திருக்கோயில் மட்டுமல்லாமல் சுற்றி இருக்கின்ற பகுதிகள், திருக்குளத்தைச் சேர்ந்த படிக்கட்டுகள், போக்குவரத்து வசதிக்காக வாகனங்கள் நிறுத்தப்படும் இடங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டோம்.

அந்த வகையிலே எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகத்தோடு காவல்துறையும் இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுபோன்ற திருவிழாக்கள் நடைபெறும் திருக்கோயில்களுக்கு நேரில் சென்று  கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆய்வு பணிகளை இன்று மேற்கொண்டோம்,
அதோடு நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கின்ற ராஜகோபுரத்தை இணைக்கின்ற படிக்கட்டுகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொடர் முயற்சியாக இந்த பணிகள் அனைத்தும் வேகப்படுத்தபடுவதை கண்டு உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறோம். ஆடி கிருத்திகையை முன்னிட்டு 21.07.2022 முதல் 25.07.2022 வரை ஐந்து நாட்களும் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும். பக்தர்கள் இறை தரிசனம் செய்வதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
 



Tags : Aadi Krithikai ,Tiruthani temple ,Minister ,Shekharbabu , Tiruthani, Temple, Aadi Krittikai, Annadanam
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...