×

குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நில விவகாரம் மாற்று இடம் தருவதாக கூறும் கோரிக்கை நிராகரிப்பு: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள அரசு நிலத்திற்கு மாற்றாக தங்களுக்கு சொந்தமான நிலத்தை ஏற்றுக்கொள்ளும்படி குயின்ஸ்லேண்ட் நிறுவனம் விடுத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பழஞ்சூர் கிராமத்தில் 21 ஏக்கர் அரசு நிலத்தில் குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யும்படி ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் 2013ம் ஆண்டு அளித்த நோட்டீஸ் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தை நடத்திவரும் ராஜம் ஓட்டல்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், குயின்ஸ்லேண்ட் நிலத்திற்கு பதிலாக தங்களுக்கு சொந்தமாக உள்ள அதே கிராமத்தில் உள்ள தனியார் பட்டா நிலத்தை மாற்று இடமாக எடுத்துக் கொள்ளக் கோரி தமிழக அரசின் நில நிர்வாக ஆணையருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மனு அளித்தோம். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிறைய பொருட்செலவில் பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. அதை வேறு இடத்திற்கு மாற்றுவதால் பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே, எங்களது கோரிக்கையை பரிசீலித்து அதே இடத்தை ஒதுக்கவும், தற்போது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் தலையிடக் கூடாது என்றும் உத்தாவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ஏற்கனவே அரசு நிலத்தை ஆக்கிரமித்துவிட்டு, தற்போது மாற்று இடம் வழங்குவதை ஏற்க முடியாது. அவ்வாறு ஏற்றுக்கொண்டால் சட்டவிரோத நடவடிக்கைகளை அனுமதிப்பது போன்றாகிவிடும். எனவே, மாற்று இடம் அளிக்கும் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து ஜூலை 14ம் தேதி பதிலளிக்கப்பட்டுள்ளது என்றார். அரசின் இந்த விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ராஜம் ஓட்டல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Tags : Queensland ,ICourt , Queensland amusement park land issue Rejection of claim for alternative location: Government brief in ICourt
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...