×

பிஎஸ்என்எல் சேவை துண்டிப்புக்கப்படும் எனக்கூறி முன்னாள் ஐடி அதிகாரி கணக்கில் ரூ.10 லட்சம் மோசடி: சைபர் குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை

சென்னை: டெலிபோன் துண்டிப்பு எனக்கூறி, ஐடி அதிகாரி வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் மோசடி செய்த நபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். வருமான வரித்துறையில் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த வாரம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் உங்கள் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு கட்டணம் கட்ட வேண்டும், இல்லை என்றால் 24 மணி நேரத்தில் உங்கள் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்களே கட்டணத்தை கட்ட வேண்டும் என்றால் குறுஞ்செய்தியின் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பணத்தை இணைய தளம் வழியாக கட்டலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதை நம்பி சீனிவாசன், தனது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் அவர் கூறிய செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து பணத்தை கட்ட கூறியுள்ளார். அதன்படி சீனிவாசனும் அந்த செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து பணத்தை கட்ட முயற்சி செய்துள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் பல்வேறு தவணைகளில் எடுக்கப்பட்டது.அதற்கான குறுஞ்செய்தியும் அவரது செல்போனுக்கு வந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த சீனிவாசன் உடனே கீழ்ப்பாக்கம் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதில், சீனிவாசன் வங்கி கணக்கில் இருந்து திருவண்ணாமலை, கொல்கத்தா, சூரத் ஆகிய பகுதிகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டது உறுதியானது. வேகமாக செயல்பட்ட போலீசார் மோசடி நபர்கள் எடுத்த ₹10 லட்சம் பணத்தில் ₹7 லட்சம் பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர் விரைந்து நடவடிக்கை எடுத்த சைபர் க்ரைம் போலீசாரை பாராட்டியுள்ளார்.

Tags : Rs 10 lakh fraud in ex-IT officer's account claiming to disconnect BSNL service: Police nets cyber criminals
× RELATED சேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து...