×

மத்திய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி படிப்புக்கு 2 கட்டமாக நுழைவுத்தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள உயர் கல்வி படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடப்பாண்டு முதல் நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவரையும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து 14 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதன்படி, கணினி வாயிலாக நடைபெற இருக்கும் இந்த நுழைவுத் தேர்வை வருகின்ற 15ம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 20ம் தேதி வரை நடத்த இருக்கிறது. 2 கட்டங்களாக இந்த தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்திருக்கிறது.

முதற்கட்ட தேர்வு ஜூலை 15ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 10 ஆயிரம் பேரும், ஆகஸ்டு 4ம் தேதி தொடங்கும் 2ம் கட்ட தேர்வை 6 லட்சத்து 80 ஆயிரம் பேரும் எழுத இருக்கின்றனர். இதில் முதற்கட்ட தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் நேற்று வெளியானது. https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் சென்று விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ச்சியாக அடுத்தடுத்து தேர்வு எழுத இருப்பவர்களுக்கு ஹால் டிக்கெட்டை விரைவில் தேசிய தேர்வு முகமை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு தேர்வர்கள், www.nta.ac.in, https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Tags : Central Universities ,National Examination Agency , 2 Phase Entrance Test for Higher Education Courses in Central Universities: Notification by National Examinations Agency
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்