×

எடப்பாடி ஆதரவாளர், வேலுமணி பினாமி அலுவலகங்களில் ரூ.500 கோடி வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கின; வருமான வரித்துறை தகவல்

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர், வேலுமணியின் பினாமியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என 40 இடங்களில் நடந்த வருமான வரித்துறையின் அதிரடி சோதனையில் ரூ.500 கோடி மதிப்புள்ள வரி ஏய்ப்பு சொத்து ஆவணங்கள் சிக்கின. எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்தபோது அவர் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையையும் சேர்த்து கவனித்தார். அப்போது, பெரும்பாலான அரசு ஒப்பந்தங்கள் அருப்புக்கோட்டையை சேர்ந்த செய்யாத்துரை என்பவருக்கே வழங்கப்பட்டன. அதிமுக ஆட்சி முடிய சில நாட்கள் இருந்த நிலையில், செய்யாத்துரையின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் கடந்த 6, 7ம் தேதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் மதுரையில் உள்ள செய்யாத்துரைக்குச் சொந்தமான வீடுகள், மற்றும் காண்ட்ராக்ட், விளம்பர ஏஜென்சி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் போலி பில்கள் தயாரிக்கப்பட்டு, பல கோடிக்கு பொருட்கள் வாங்கியது போலவும், செலவு செய்தது போலவும் கணக்கு காட்டி கருப்பு பணமாக மாற்றப்பட்டு முறைகேடுகள் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆவணங்கள், ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டன. எடப்பாடிக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு பல கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நண்பர்கள், பினாமி வீடுகள், நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரான இன்ஜினியர் சந்திரசேகர் வீட்டில் கடந்த 6ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அன்றைய தினம் அவரது வீடு, பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை வீடு, பீளமேட்டில் உள்ள கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனம் உட்பட 6 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இதில் சொத்து மற்றும் நிறுவனங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கிடைத்தது.

தொடர்ந்து கேசிபி நிறுவன நிர்வாக இயக்குநர்  சந்திரபிரகாஷ் வீடு, சிங்காநல்லூரில் உள்ள அவரது தனி அலுவலகம், அவரது கார்  டிரைவர் பிரபு, நிறுவன ஊழியர்கள், எஸ்.பி வேலுமணி உதவியாளர் சந்தோஷ், தம்பி  வசந்தகுமாரின் வீடு, புலியகுளத்தில் உள்ள ஆலயம் அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் இன்ஜினியர்  சந்திரசேகரின் தம்பி செந்தில் பிரபு, அவரது தந்தை ராஜன் ஆகியோர் வீட்டில்  2வது முறையாக சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்கள், நபர்களிடம் நடைபெற்ற சோதனை மற்றும் விசாரணை நேற்று முன்தினம் நள்ளிரவு 1  மணி அளவில் முடிவடைந்தது.  பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனத்தில் மட்டும் கடந்த 6 நாட்களாக சோதனை  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தினர் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும்  மாநகராட்சி பணிகள் உள்ளிட்ட பலவற்றை டெண்டர் எடுத்து செய்துள்ளனர்.  

எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு ஒப்பந்த  முறைகேட்டில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியது வருமானவரித்துறை  விசாரணையில் தெரியவந்தது. இதற்கான ஆதாரங்கள், அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பாக ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் பென்டிரைவ் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணிக்கு நெருங்கிய இந்த இரு குரூப்புகளின் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து மட்டும் ரூ.500 கோடிக்கு முறைகேடுகள் செய்து, சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது முதல்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களின் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : Edappadi ,Velumani benami , Rs 500 crore tax evasion documents found in offices of Edappadi supporter, Velumani benami; Income Tax Information
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்