சிஎம்டிஏவில் முதல்முறையாக பெண் ஓட்டுநர் பணி நியமனம்; அமைச்சர் முத்துசாமி பாராட்டு

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) முதன்முறையாக பெண் ஓட்டுநரை பணியில் நியமித்து புதிய பெருமையை பெற்றுள்ளது. தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர்  சு.முத்துசாமி  நேற்று முன்தினம் சிஎம்டிஏவில் 10 ஓட்டுநர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். அவர்களில் ஒருவர் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த இந்துபிரியா (34). அதன் மூலம்  சிஎம்டிஏவில் பணியாற்றும் முதல் பெண் டிரைவர் என்ற பெருமையை  இந்துபிரியா  பெற்றதுடன், சிஎம்டிஏவும் சிறந்த முன் முயற்சியின் மூலம் தன்னையும் பெருமைப்படுத்திக் கொண்டுள்ளது. இதுகுறித்து இந்துபிரியா கூறும்போது, ‘பத்தாம் வகுப்பு முடித்ததும்  டிரைவர் பயிற்சி பெற்றேன்.  திருமணத்துக்கு பிறகு கணவர் மூலம்  தன் திறனை மேம்படுத்திக் கொண்டேன்.

கூடவே கும்மிடிப்பூண்டியில் உள்ள சாலை போக்குவரத்து பயிற்சி நிறுவனத்தில்  கனரக வாகனங்களை இயக்குவதற்கான பயிற்சியை இலவசமாக பெற்றேன். அப்போது என்னுடன் பயிற்சிப் பெற்ற குழுவில் இருந்த 25 பேரில் நான் மட்டுமே பெண். பெண்களும் எல்லா வகையிலும்  திறமையான ஓட்டுநராக செயல்பட முடியும் என்பதை நிரூபிப்பதுதான் எனது இலக்கு’ என்று கூறினார். இந்துபிரியா ஓட்டுநர் பணியுடன் பெருநகர பகுதிகளில் கட்டிடம் கட்டுவதில் விதிமீறல்கள் உள்ளதா என்பதை கண்காணிக்கும் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.

இவருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கியதுடன் சிஎம்டிஏ வளாகத்தில்   அமைச்சர் முத்துசாமி,  நேற்று முன்தினம்   ‘தளிர் அகம்’  என்ற  பெயரில் குழந்தைகள் காப்பகத்தையும் தொடங்கி வைத்தார். சிஎம்டிஏவில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் கைக் குழுந்தைகள் அலுவல் நேரத்தில் இந்த மையத்தில் வைத்து பராமரிக்கப்படும்.  இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி கூறுகையில், ‘சிஎம்டிஏவில் பணிபுரியும் பெற்றோரின் நலனுக்காக, குறிப்பாக பெண் ஊழியர்களின்  நலனுக்காக,  தரை தளத்தில் குழந்தை காப்பகம்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை மேற்கொண்டதற்காக சிஎம்டிஏவை வாழ்த்துகிறேன்.  நமது மாநிலத்தில் காப்பகத்தை திறக்கும் முதல் துறை சிஎம்டிஏ தான்.  இம்முயற்சி, வேலைக்குச் செல்லும் பெற்றோரின், குறிப்பாக அம்மாக்களின்  கவலைகளை தீர்க்கும் என நம்புகிறேன்’ என்றார்.

இத்துறையின்  முதன்மை செயலாளர்  ஹிதேஷ்குமார் மக்வானா, ‘பெண்கள்  தங்கள் அலுவலக வேலை, குழந்தைகளை பராமரிக்கும் பணிகளை  சமநிலைப்படுத்த  இந்த காப்பகம் உதவும்’ என்றார். அதேபோல் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, ‘ ஊழியர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றும் சூழலை உருவாக்கி மற்ற நிறுவனங்களுக்கு உதாரணமாகி உள்ளது. அதேபோல்தான் பெண் ஒருவரை ஓட்டுநராக நியமித்தது, தளிர் அகம் தொடங்கியிருப்பது எல்லாம் முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளோம். இது ஆரம்பம்தான். இவற்றை மேலும் மேம்படுத்த, அதிகரிக்க  ஆலோசனைகள் செய்து வருகிறோம்’ என்று கூறினார்.

Related Stories: