×

திருப்புத்தூர் பாலாறு பகுதியில் அனுமதியில்லாமல் மரங்களை வெட்டிய நபர், 50 பனைவிதைகளை நட வேண்டும்; தாசில்தார் உத்தரவு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பாலாறு பகுதியில் அரசின் அனுமதியில்லாமல் பனை மரங்களை வெட்டியவருக்கு 50 பனை விதைகளை நடவேண்டும் என தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் இருந்து திருப்புத்தூர் வழியாக பாலாறு செல்கிறது. திருப்புத்தூர் குமரன் நகர் பகுதியில் பாலாற்றில் இருந்து பெரிய கண்மாய்க்கு வரத்து கால்வாய் பிரிந்து செல்கிறது. இந்த ஆற்றுப்பகுதியை ஒட்டியுள்ள வரத்து கால்வாயில் ஏராளமான பனைமரங்கள் உள்ளன.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இப்பகுதியில் பனைமரங்களை வெட்டி எடுத்து சென்றதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விஏஓவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட கே.வையிரவன்பட்டி விஏஓ சித்ரா பனைமரம் வெட்டியது குறித்து விசாரித்து பின்னர் கண்டவராயன்பட்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.

பனை மரங்களை வெட்டியவரை அழைத்து தாசில்தார் விசாரித்தபோது, பனைமரங்கள் ராமையா என்பவரின் பட்டா இடத்தில் இருந்ததும், அதை அவரது மாமனார் வெட்டியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருப்புத்தூர் தாசில்தார் வெங்கடேசன், பட்டா இடமாக இருந்தாலும் அரசின் அனுமதியில்லாமல் வெட்டக்கூடாது என அறிவுறுத்தி, மரங்களை வெட்டிய பகுதியில் கரையை மேம்படுத்தி அந்த இடத்தில் 50 பனைவிதைகளை நடவேண்டும் என இடத்தின் உரிமையாளருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை விஏஓ சித்ரா திரும்ப பெற்றார்.

Tags : Thiruptutur , A person who cut trees without permission in Tiruputhur Balaru area should plant 50 saplings; Tahsildar order
× RELATED திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டு...