×

திருமலை குறித்த ஆய்விற்கு தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்குமா?

*வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பு

*சுற்றுலா மேம்பாட்டு திட்டம் வேண்டும்

சிவகங்கை : சிவகங்கை அருகே திருமலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மலை குறித்து ஆய்வு நடவடிக்கையை தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 9கி.மீ தொலைவில் உள்ளது திருமலை. சுமார் 200அடி உயர மலையின் மீது 8ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக்கோயில், 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாகம்பிரியாள், மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

பாறையைக் குடைந்து கட்டப்பட்ட குடைவரை கோயிலின் உள்ளே சிவனும் மீனாட்சியும் திருமணக் கோலத்தில் சிலையாக உள்ளனர். மலைக்கொழுந்தீஸ்வரர் சாய்ந்த லிங்க வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளார். அதற்கு வலதுபுறம் பாகம்பிரியாள் அம்மன் காட்சி தருகிறார்.

கோயில் தோன்றிய காலத்தில் கருவ வீரபாண்டியன் இக்கோயிலைக் காத்து வந்துள்ளதாகக் கூறுகின்றனர். அவருக்கும் சிலையுள்ளது. மலையை முன்புறம் வெகு தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு காளைமாடு களைத்து படுத்திருப்பது போல் பாறையமைப்பு காணப்படும். அதற்கு மேல் கோவில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி வற்றாத 8 நீர்ச்சுனைகள் உள்ளன. மலையின் தென் பகுதியில் அகத்தியர் வாழ்ந்த இடமாகக் கருதப்படுகிறது. இக்கோயிலுக்கு வலதுபுறம் அமைந்துள்ள தாமரைக்குளம் மிகச்சிறப்பு பெற்றதாகும்.

ஆடி அமாவாசைக்கும் தைப்பூசத்திற்கும் இங்கு சிறப்பு விழாக்கள் நடைபெறும். மலையில் உள்ள பாறைகளில் மூலிகைச் சாயங்களால் வரையப்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியில் இந்த ஓவியங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த ஓவியங்களில் ஒன்றாக எகிப்திய கடவுள்களில் விண்ணரசனாக கருதப்படும் ஹோரஸ் எனும் கழுகு கழுத்துள்ள உருவம் உள்ளது. இவை சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கருதப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம் மல்லப்பாடி, தென் ஆற்காடு ஆலம்பாடி, கீழ்வாலை, பாடியேந்தல், செத்தவரை, வட ஆற்காடு சென்னராயன்பள்ளி, கோவை வேட்டைக்காரன்மலை, நீலகிரி கோவோனக்கரை, திண்டுக்கல் சிறுமலையில் மட்டுமே குகை, பாறை ஓவியங்கள் உள்ளன. கல்வெட்டு புதையல்’ என அழைக்கும் வகையில் கோவில் பிரகாரங்கள், தூண்கள், படிகள், கற்சுவர்கள் என எங்கு திரும்பினாலும் மலைகளில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன.

இங்கு, வரலாற்றிற்கு முற்பட்ட மனிதன் நாகரிக தடயங்களில் இருந்து, 14ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டுக்கள் வரை உள்ளன. பெருங்கற்காலத்தினரின்(சங்க காலம்) குகை ஓவியம், முதுமக்கள் தாழி, சமணர் கால கற்படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டு, 8ம் நூற்றாண்டு குடைவரை கோவில், 12, 13, 14ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களின் மூலம் இத்தலத்தின் தொன்மையை அறியலாம்.

இக்குகை நெற்றியில் உள்ள தமிழ்பிராமி எழுத்துக்களில் இருந்து சமணர்கள் இங்கு தங்கி சென்றதற்கான சுவடுகளை அறியலாம். குகைகளில் சமணர்களின் படுக்கை போன்ற 8அமைப்புகள் இங்கு உள்ளன. ஒரு குகையில் 17தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளன. தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், தங்களுக்கு படுக்கை அமைத்து கொடுத்தவர்களுக்கு சமணர்கள் நன்றிக்கடனாய் விட்டுவித்துள்ளனர். பொதுவாக தமிழகத்தில் கண்டறியப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகளின் காலம் கி.மு 3ம்நூற்றாண்டாகவே அறியப்பட்டு வந்தது. ஆனால் திருமலையில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழர் வரலாற்றின் பொக்கிஷமாக கருதப்படும் திருமலையை வெகு தாமதத்திற்கு பின்னர் கடந்த 2016ல் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் இதுவரை அரசு சார்பிலான ஆய்வுகள் தொடங்கப்பட வில்லை. இங்கு தொல்லியல் ஆய்வுகள், சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

உடன்ஆய்வு தேவை

வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: மிகவும் பழமை வாய்ந்த மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டு கொண்டு வந்த பிறகும் முன்பு போலவே பாதுகாப்பின்றி காணப்படுகிறது. எவ்வித பாதுகாப்பும் இல்லாததால் மலை மீதுள்ள எழுத்துக்கள், ஓவியங்கள் மீது பலரும் பல்வேறு பொருட்களால் எழுதி செல்கின்றனர். இதனால் அனைத்தும் சிதைந்து அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் செய்ய தொல்லியல் துறை அலுவலகம் கூட சிவகங்கை மாவட்டத்தில் இல்லை. எனவே தாமதப்படுத்தாமல் உடனடியாக ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Department of Archeology ,Tirumala , Sivagangai: Survey work should be started on the hill under the control of the Archaeological Department in Tirumala near Sivagangai
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ