×

சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு மதன் விவகாரத்துக்கு பிறகு பதுங்கும் ‘பப்ஜி கில்லாடிகள்’: வீடியோக்களை மறைத்து தப்ப முயற்சி?

சென்னை: சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் பறித்த விவகாரத்தில் பிடிபட்ட யூடியூப் கேம் மதன் மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில், இதே போன்ற செயல்களில் பப்ஜி யூடியூபர்கள், தங்கள் வீடியோக்களை மறைத்து தப்ப முயற்சிப்பதாக, பப்ஜி பிரியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டாக பப்ஜி உள்ளது. இந்த விளையாட்டுக்கு சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் அடிமையாகி கிடக்கின்றனர். குறிப்பாக, பப்ஜிக்கு அடிமையான சிறுவர்கள், இளைஞர்கள் பலர், படிப்பை பாழாக்கி தங்கள் எதிர்காலத்தையே தொலைத்து விட்டு நிற்கின்றனர். இந்த சூழ்நிலையில்தான், பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 கேம் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. கூகுள், பிளே ஸ்டோர்களில் இருந்து இவை நீக்கப்பட்ட பிறகும், கொரியன் வெர்ஷன் மற்றும் விபிஎன்-ஐ பயன்படுத்தி பலர் விளையாடி வருகின்றனர்.இவ்வாறு பப்ஜி விளையாடும்போது, இவற்றை லைவ் ஸ்டிரீமிங் செய்து யூடிப்களில் பதிவேற்றி பிரபலம் அடைந்தவர் மதன் என்ற யூடியூபர். விளையாடும்போது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆபாசமாக திட்டிப் பேசுவது இவரது வழக்கமாக இருந்துள்ளது. இவரது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இணைத்து வைத்துள்ளார். இவற்றை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். அங்க பிரத்யேக சாட்டிங்கில் ஆபாசமாக அந்தரங்க விஷயங்களை இவர் பேசுவதாக புகார்கள் குவிந்து வருகின்றன. கடந்த சுமார் 2 ஆண்டாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் மேலும் பலர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி விட்ட சூழ்நிலையில், இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தேடுவதை அறிந்து இவர் தலை மறைவாக உள்ளார்.இவரைப்போலவே பலர் பப்ஜி லைவ் ஸ்டிரீமிங்கை யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வலைதளங்களில் வெளியிட்டு பிரபலம் ஆகியுள்ளனர். பெண் உட்பட பல யூடியூபர்கள் இதை தனது பொழுதுபோக்காக மட்டுமின்றி, பணம் சம்பாதிப்பதற்கான முக்கிய தளமாகவும் பயன்படுத்துகின்றனர். மதன் விவகாரத்துக்கு பிறகு யூடியூப் பப்ஜி கேம் ஸ்டிரீமிங் வெளியிடுவோர் பலர் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். தங்களும் சிக்கிவிடுவோமோ என்ற அச்சம் அவர்களை தொற்றிக் கொண்டு விட்டது. இதுதொடர்பாக பப்ஜி பிரியர்கள் மற்றும் மேற்கண்ட யூடியூப் சேனல்களை அடிக்கடி பார்த்து வந்தவர்கள் சிலர் கூறுகையில், ‘‘யூடியூபில் கேமிங் வீடியோக்களை சிலர் பகிர்ந்து பிரபலமாக உள்ளனர். அதுவும் தமிழிலேயே மதன்போல சிலர் இதுபோன்ற சேனலை நடத்தி வருகின்றனர். விளையாடும்போது அவர்கள் பேசுவது சிலசமயம் இரட்டை அர்த்தம் பொதிந்ததாக இருக்கும். இதுபோன்ற கவரும் வகையிலான பேச்சுக்கள் இளைஞர்களை, மாணவர்களை அடிமையாக்கி விடுகின்றன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு விட்டதால் சக மாணவர்களுடன் அரட்டை அடிப்பது போன்ற பொழுது போக்குகள் இல்லை. இதனால் இதுபோன்ற உரையாடல்களை கேட்கும்போது தன்னிலை மறந்து விடுகின்றனர். அதிலும் பப்ஜி லைவ் ஸ்டிரீமிங் செய்யும் பெண் யூடியூபர்கள் சிலர் கூட இரட்டை அர்த்தத்தில் பேசுவதை சில சமயம் காண முடிகிறது. இதையும் பதிவேற்றி யூடியூப்களில் ஒளிபரப்புகின்றனர். ஆண்களை செல்லமாக ‘வாடா, போடா’ என்றெல்லாம் அழைப்பதால் அவர்களுடன் இணைந்து பப்ஜி விளையாடுவது, சாட்டிங் செய்வது மாணவர்களையும், இளைஞர்களையம் குஷிப்படுத்துவதாக உள்ளது. சிலர் மதன் போலவே சாட்டிங் செய்வதும் உண்டு. இப்படி யூடியூப் மூலமாக பேசி பார்வையாளர்கள் அதிகரிப்பதாலும் அவர்களுக்கு பண வருவாய் கிடைக்கிறது. இதன்மூலம் கிடைத்த பணத்தில் போன், டேப்லட் போன்றவற்றை வாங்கி அதையும் சமூக வலைதளத்தில் பகிர்கின்றனர். இதுவும் இத்தகைய சேனல்கள் பெருக முக்கிய காரணம். யூடியூப்களில் மேற்கண்ட வீடியோக்கள் பல பிரைவேட் என போட்டு பலர் மறைத்து விட்டனர். தற்போது அவற்றை தேடினாலும் பார்க்க முடிவதில்லை. மதன் போல தாங்களும் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சமும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றனர். 4 பிரிவுகளில் வழக்கு: யூடியூபர் மதன் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் (509), ஆபாசமாக பேசுதல் (294பி), தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். * பப்ஜி கேமர் தலைமறைவுயூ-டியூபர் மதனை நேரில் ஆஜராக புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவினர் போலீசார் சம்மன் அனுப்பிய போதும் ஆஜராகாததால் யூ-டியூபர் மதன் மீது போலீசார் வழக்குபதிவு செய்வதற்காக சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று வருகின்றனர். மேலும், வீடியோக்கள் அனைத்துமே ஆபாசமாக இருப்பதால் மதனின் யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்க சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். மதன் தனது அடையாளங்களை மறைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் புகைப்படங்களை வைத்து கண்டறிவதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திலும் ஒரு புகார் வந்துள்ளதால் புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இணைந்து யூ-டியூபர் மதனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். * இப்ப 18 பிளஸ் இல்லீங்கமதன் நடத்திய பப்ஜி யூடியூப் ஸ்டிரீமிங் சேனல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மதன் கைதுக்கு பிறகு உஷாரான இதுபோன்ற பப்ஜி யூடியூபர்கள், அதை 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குதான் இந்த சேனல் என மாற்றி விட்டனர் என, இந்த சேனல் ரசிகர்கள், பார்வையாளர்கள் பலரும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். அதோடு, சின்னப்பசங்களிடம் பேசுவது போல ‘இந்த சேனல்ல பெண்களை அப்படி இப்படி பேசக்கூடாது. அப்யூஸ் பண்ணினா தப்பு… பாத்துக்கோங்க… என அட்வைஸ் மழையுடன் கடந்த சில நாட்களாக வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.* போலீசிடம் சேலம் பெண் சிக்கினார்சேலம்: தலைமறைவான மதனின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்த போது, சேலத்திலிருந்து ஒரு செல்போன் எண் அடிக்கடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு சேலம் வந்த தனிப்படை போலீசார், குறிப்பிட்ட செல்போன் எண்ணை கண்காணித்தனர். அந்த எண்ணின் சிக்னல் தாதகாப்பட்டி சீரங்கன் தெருவில் உள்ள ஒரு வீட்டை காட்டியது. தொடர்ந்து நேற்று காலை அந்த வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து, தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது மதன் அங்கு இல்லை. பின்னர் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில், மதனுடன் அப்பெண் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரிடம் மேல் விசாரணை நடத்த, தனிப்படை போலீசார் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்….

The post சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு மதன் விவகாரத்துக்கு பிறகு பதுங்கும் ‘பப்ஜி கில்லாடிகள்’: வீடியோக்களை மறைத்து தப்ப முயற்சி? appeared first on Dinakaran.

Tags : Madan ,Chennai ,YouTube ,Cam Madan ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!