×

திமுகவின் 50 ஆண்டு கால உழைப்பால் தமிழ்நாடு வளர்ந்து இருக்கிறது: திருவண்ணாமலையில் கலைஞர் சிலை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் கலைஞரின் 8 அடி திருவுருவச் சிலை திறப்பு விழா நேற்றிரவு நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைத்தார். தொடர்ந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். சட்டபேரவை துணை தலைவர் கு.பிச்சாணடி, எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
கடந்த வாரத்தில் திருப்பத்தூர், கரூரில் நான் மக்கள் கடலை பார்த்தேன். அதை எல்லாம் தாண்டி இன்று திருவண்ணாமலை கூட்டம், கலைநிகழ்ச்சியாக இருந்தாலும், மக்கள் எழுச்சியாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் என்னை திக்குமுக்கடாக வைத்து இருக்கிறார் நம்முடைய வேலு. திமுக விழாவின் வேந்தர் என்றால் அது வேலு தான். எ.வ.வேலு என்று சொன்னால் எதிலும் வல்லவர் என்று சொல்லுவது அவரை புகழ வேண்டும், பாராட்ட வேண்டும் என்று சொல்லுவதற்காக இல்லை. அவருடைய இயல்பே அப்படி தான். அவரிடம் ஒரு செயலை கொடுத்தால் அதன்பிறகு அதை பற்றி நாம் கவலை படவேண்டாம். சொன்ன நாளைக்கு வந்தால் போதும். அந்த அளவுக்கு சுத்தமாக கனகச்சிதமாக அதை முடித்து காட்டக்கூடியவர் தான் வேலு.

அண்ணா பெயரில் நுழைவு வாயில் அமைந்து இருக்கிறது. தாழ்ந்த நிலையில் இருந்த தமிழகத்தை தலைநிமிர வைத்த பெருந்தகை அறிஞர் அண்ணா. பூமிபந்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ? அவர்களின் இதயங்களில் வீற்றிருக்கிறார் அண்ணா. அதன் நினைவாக இந்த அண்ணா நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இனத்தை தம் தொலைநோக்கு பார்வையால் உயர்த்தியவர் கலைஞர். அதனால் தான் அவரது சிலையில் வானத்தை நோக்கி கலைஞர் கை உயர்த்தி நிற்கிறார். தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும். முற்போக்கு சமுதாயமாக தமிழ் இனம் வளர்ந்திட வேண்டும்.
திருவண்ணாமலையும், தீபத்தையும் பிரித்து பார்க்க முடியாது. அதேபோல் திருவண்ணாமலையையும், திமுகவையும் பிரித்து பார்க்க முடியாது.

கழகம் நடத்திய முதல் பொதுக்கூட்டத்தில் ₹1451 வசூல் ஆனது. அதில் 100 ரூபாய் திருவண்ணாமலையை சேர்ந்த ப.உ.சண்முகம் வழங்கினார். முதன் முதலில் திமுக 1957ம் ஆண்டு போட்டியிட்டது. அதில் 15 எம்எல்ஏக்கள் வென்றனர். அதில் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ப.உ.ச, பி.எல்.சந்தானம், கள்ளூர் அண்ணாமலை ஆகிய 3 பேரும் வென்றனர். அதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் இரண்டு பேர் வென்றனர். அதில் திருவண்ணாமலையை சேர்ந்த இரா.தர்மலிங்கம் வென்றார்.

கழகத்துக்கு அமைப்பு ரீதியாக கால்கோள் நாட்ட அடித்தளமிட்டது திருவண்ணாமலை. எனவே இங்கு அண்ணா நுழைவு வாயிலும், கலைஞர் சிலையும் அமைய பொருத்தமான இடம். 1957 தேர்தலில் வெற்றி பெற்றதும் கழக மாநாடு நடத்த அண்ணா திட்டமிட்டார். அப்போது வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்த திருவண்ணாமலையில் தான் மாநாட்டை நடத்தினார்.

இந்தி ஆதிக்கம் தலைவிரித்து ஆடிய காலம் அது. முதல் நாள் இந்தி எதிர்ப்பு மாநாடும், 2வது நாள் கழக மாநாடும் நடந்தது. 1957ம் ஆண்டு செப்டம்பர் 21, 22ம் தேதிகளில் நடந்த மாநாட்டிற்கு துறவி அருணைகிரி அடிகள் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து அண்ணா உரையாடினார். தமிழ் மொழி காக்கவும், இந்தி ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு காட்டவும், தமிழ்நாட்டிற்கு வழிகாட்டியாக இருந்தது திருவண்ணாமலை. 1963ல் திருவண்ணாமலை இடைத்தேர்தலில் திமுக வெற்றி வேட்பாளாக ப.உ.ச போட்டியிட்டார். ஆளுங்கட்சி காங்கிரஸ் திமுக வெற்றி பெற வேண்டுமானால் யாரை அனுப்ப வேண்டும் என்று அண்ணா யோசித்தார். கலைஞரை தேர்தல் பொறுப்பாளாராக அனுப்பி வைத்தார். இரவு, பகல் பாராமல் உழைத்ததால், அந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றோம். இந்த இடைத்தேர்தல் வெற்றி தான் பொதுத்தேர்தல் வெற்றிக்கு அடித்தளமிட்டது.

எதிர்கட்சியாக இருந்து இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. அதைதொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடந்தது. சட்டமன்ற தேர்தல் செலவுக்கு தேர்தல் நிதி ₹10 லட்சம் தேவைப்படும் என்றார் அண்ணா. கழகத்தின் பொருளாளராக இருந்த கலைஞர் ₹11 லட்சத்தை திரட்டி கொடுத்தார். அந்த மேடையில் திருவாளர் ₹11 லட்சம் என அண்ணா அழைத்து பாராட்டினார். எனவே திமுக தேர்தல் வெற்றிக்கும் வித்திட்டது திருவண்ணாமலை. கடந்த ஆண்டு தேர்தல் முன்பாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்தை திருவண்ணாமலையில் தான் தொடங்கினேன்.

மக்கள் அரசாக, மக்கள் நலன் அரசாக, மக்கள் விரும்பும் அரசாக, மக்களின் கவலை போக்கும் அரசாக, கனவை நிறைவேற்றும் அரசாக அமையும் என்று மக்கள் நம்பிக்கையை வைத்தனர். அதேபோல் தேர்தலில் வென்று மக்கள் நலன் அரசாக, மக்கள் விரும்பும் அரசாக திராவிட மாடல் அரசாக நடத்தி வருகிறேன். தமிழை வளர்க்கும், தமிழர்களை பாதுகாக்கும் அரசை நடத்தி வருகிறேன். அண்ணாவின் ஆசைகளை, கலைஞரின் கனவுகளை நிறைவேற்றி வருகிறேன் என்று கம்பிரமாக நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன்.

கடமையை சரியாக செய்து வருகிறேன் என்று சொல்ல விரும்புகிறேன். உலகிலேயே அண்ணா மிகவும் கொடுத்து வைத்தவர். தந்தை பெரியாரை ஆசிரியராகவும், கலைஞரை மாணவராகவும் பெற்று இருக்கிறேன் என்று அண்ணா தெரிவித்தார். கழகம் வளர காரணம் கலைஞரின் தொண்டு தான். அண்ணாவை போல, கலைஞரை போல, பேராசிரியர் போல உழைக்கும் ஆற்றலை பெற வேண்டும்.  கடந்த 50 ஆண்டுகளாக திமுகவின் உழைப்பினால் தான் தமிழ்நாடு வளர்ந்து இருக்கிறது. மேன்மை அடைந்து இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கும் இனத்துக்கும் காவல் அரண் திமுக தான். கலைஞர் சிலை அல்ல. கொள்கை மலை, அண்ணா, கலைஞர், பேராசிரியர் போல, கழகத்துக்கு உழைக்க வேண்டும். மனசாட்சிக்கும், நாட்டுக்கு மக்களுக்கும் தான் அஞ்சுகிறேன் தவிர வேறு எதற்காகவும் இல்லை என்று அண்ணா சொன்னார். எந்த நம்பிக்கையுடன் திமுக ஆட்சி உருவாக வேண்டும் என்று வாக்களிதீர்களோ? அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பேன் என்று அண்ணா, கலைஞர் மீது ஆணையாக கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அதைதொடர்ந்து திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழிகளை வழங்கினார். கலைஞர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு தங்க சங்கிலி அணிவித்தார். பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி மஸ்தான், அவைத்தலைவர் தா.வேணுகோபால், மாநில மருத்துவ அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பனர் இரா தர், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Tamil Nadu ,Tiruvannamalayas ,MC. K. Stalin , DMK's 50 years of work, development of Tamil Nadu, Tiruvannamalai, artist statue
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...