×

நாராயணத்தேவன்பட்டியில் பிளாஸ்டிக் குப்பைக்கு ‘துட்டு’ 1 கிலோவுக்கு 8 ரூபாய்: மக்கள் வரவேற்பு

கம்பம்: நெகிழி இல்லா தமிழகம் உருவாக்கவும், தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டுவரும் வகையிலும் கிராமப்பகுதிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாராயணதேவன்பட்டி ஊராட்சியில் இத்திட்டத்தின்படி பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து இதில் பிளாஸ்டிக் பை, எண்ணெய் கவர், பால் கவர், பிஸ்கட் கவர், மசாலா பாக்கெட் கவர் ஆகிய பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து கொடுத்தால் ஊராட்சி சார்பில் ஒரு கிலோ 8 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊராட்சிப்பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டியன், ஊராட்சி துணைத்தலைவர் மகேந்திரன், ஊராட்சி செயலர் ஈஸ்வரன் உட்பட அதிகாரிகள் பொதுமக்கள் குப்பையை பிரித்து தருவதை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். ‘குப்பைக்கு துட்டு’ என்னும் இத்திட்டம் கிராம மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதுகுறித்து ஊராட்சித் தலைவர் பொன்னுத்தாய் கூறுகையில், ‘‘தமிழக அரசின் இத்திட்டத்தால் வீதியில், சாக்கடைகளில், பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவது நின்று விடும். குப்பைக்கு பணம் கிடைக்கிறது என்பதால் மக்கள் ஆர்வத்துடன் அவற்றை வீடு தேடி வரும் தூய்மை காவலரிடம் ஒப்படைக்கின்றனர். எங்கள் கிராம் இனி நெகிழி இல்லா கிராமமாக மாறும். இத்திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.’’ என்றனர்.

Tags : Narayanathevanpatti , 'Tutu' for plastic waste in Narayanathevanpatti 8 per 1 kg: People welcome
× RELATED கம்பம் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு...