உதய்பூர் தையல்காரர் கொலை சம்பவத்தில் ‘2611’ எண் பைக்கை கொலையாளிகள் பயன்படுத்தியது ஏன்?: ஆர்டிஓ வெளியிட்ட திடுக் தகவல்

உதய்பூர்: உதய்பூர் தையல்காரர் கொலை சம்பவத்தில் ‘2611’ எண் கொண்ட பைக்கை கொலையாளிகள் பயன்படுத்தியது ஏன்? என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த தையல்காரர் கன்னையா லால்  என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் பட்டப்பகலில் கழுத்தை அறுத்து கொடூரமாக  கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளிகள் முகமது ரியாஸ் அத்தாரி, கோஷ் முகமது  ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற  காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கன்னையா லால் கொலை வழக்கில் மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது கொலையாளிகளின் மனநிலையை காட்டும் விதமாக உள்ளது. கன்னையா லால் கொல்லப்படுவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே, குற்றவாளி முகமது ரியாஸ் அத்தாரி, தனது பைக்கிற்கு ‘2611’ என்ற நம்பர் பிளேட்டைப் பெற 1,000 ரூபாய் கொடுத்ததாக கொலையாளிகளுக்கு அறிமுகமான ஒருவர் தெரிவித்தார்.

‘2611’ என்ற பதிவு எண் ஆனது கடந்த 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதல் தேதியைக் குறிப்பிடுகிறது.  குற்றவாளியின் பைக்கில் அதே நம்பர் பிளேட் உள்ளது. இதுகுறித்து உதய்பூர் வட்டார போக்குவரத்து ஆணையம் பிரபு லால் பமானியா கூறுகையில், ‘2611 என்ற விருப்ப பதிவு எண்ணுக்கான ரூ. 1,000 கட்டணம் வாகன உரிமையாளரிடம் பெறப்பட்டது. இந்த பைக்கின் பதிவு கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி செய்யப்பட்டது’ என்றார். கன்னையா லாலை கொன்ற  முகமது ரியாஸ் அத்தாரி, கோஷ் முகமது  ஆகிய இருவரும், ‘ஆர்ஜே 27 ஏஎஸ் 2611’ என்ற பதிவு எண் கொண்ட பைக்கில் இருந்து தப்பி சென்றதாகவும், அவர்கள் இருவரும் ராஜ்சமந்தில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.

Related Stories: