×

ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்ப பூங்கா அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் சார்பாக வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் இடையே  செமிகண்டக்டர் உயர் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. முதல்வர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில், நேற்று தலைமை செயலகத்தில், சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்ப பூங்காவை அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில், இத்திட்டத்தில் 25,600 கோடி ரூபாய்  முதலீடு செய்திடவும், 1500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கவும்   திட்டமிட்டுள்ளது. சர்க்யூட் வடிவமைப்பாளர்கள், உற்பத்திப் பொருள்  விநியோகஸ்தர்கள், உபகரண விநியோகஸ்தர்கள் மற்றும் செமிகண்டக்டர்  அவுட்சோர்சிங் மற்றும் பரிசோதனை நிறுவனங்கள் ஆகிய திட்டங்கள் இந்த பூங்காவில் அமைக்கப்படும். இதன் காரணமாக உருவாகக்கூடிய சூழல் அமைப்புகளின்  மூலம் 25,000 பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைத்திடும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஒரு செமிகண்டக்டர் தொழில்நுட்ப குழுமமாகும். இக்குழுமத்தில் உள்ள துணை நிறுவனங்களான இன்னோவேட்டிவ் க்ளாபல் சொல்யூஷன்ஸ் அண்ட் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட், ஐஜிஎஸ்எஸ் ஜிஎஎன் பிரைவேட் லிமிடெட் மற்றும் காம்பௌண்ட்டெக்  பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து முதல் அடுக்கு செமிகண்டக்டர் வார்ப்பகம் / புனையமைப்பு திறன்கள் மற்றும் வளர்ந்து வரும் முக்கிய தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ள ஒரு தனித்துவம் வாய்ந்த  குழுமமாக விளங்குகிறது.

ஐஜிஎஸ்எஸ்வி நிறுவனம், ப்ராஜெக்ட் சூரியா என்ற பெயரில் செமிகண்டக்டர்  புனையமைப்பு  திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.  இதற்காக, இந்தியாவில்  செமிகண்டக்டர் புனையமைப்பு திட்டங்களை அமைப்பதற்கான ஒன்றிய அரசின் \\”இந்தியா செமிகண்டக்டர் மிஷன்\\” திட்டத்தின் கீழ் விண்ணப்பம்  அளித்துள்ளது. இந்நிகழ்ச்சியின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு  மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,

தலைமைச் செயலாளர்  இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை  இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பூஜா குல்கர்னி, ஐஜிஎஸ்எஸ்வி  நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள்  கமலக்கண்ணன், நரேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். 


Tags : IGSS Ventures Pvt. ,Semiconductor Hi-Tech Park ,Chief Minister ,M.K.Stalin. , MoU with IGSS Ventures Pvt. to set up Semiconductor Hi-Tech Park: Signed in presence of Chief Minister M.K.Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...