அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ள பொருளாளர் பதவிக்கு, சமூக ரீதியில் மோதும் தலைவர்கள்; பதவிக்கு வரும் முன்பே குடைச்சல் ஆரம்பம்

சென்னை: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ள பொருளாளர் பதவியை காலி செய்ய திட்டமிட்டுள்ளதால், அந்தப் பதவிக்கு சமூக ரீதியில் தலைவர்கள் மோதுவதால், ஆரம்பமே இப்படியா என எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். அதேநேரத்தில், அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்துள்ளது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தன்னை அடுத்த தேர்தல் வரும்வரை நீக்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வத்திடம் பொருளாளர் பதவியும், எடப்பாடி பழனிச்சாமியிடம் தலைமை நிலைய செயலாளர் பதவியும் உள்ளது. இந்த இரு பதவிகளிலும் புதிய ஆட்களைப் போட எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். அதில் பொருளாளர் பதவிதான் பொதுச் செயலாளர் பதவிக்கு அடுத்த பெரிய பதவி. தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்கள், அறக்கட்டளைகள், கட்சியின் நிதி, செலவு, வருமானம் போன்ற பணிகளை கவனிக்க வேண்டும். இதனால் பொருளாளர் பதவியை பிடிக்க பலரும் போட்டி போடுவார்கள். ஜெயலலிதா இந்தப் பதவியை முன்பு திண்டுக்கல் சீனிவாசனிடமும் அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் கொடுத்தார். தற்போது அந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அணியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அணியில் மூத்த தலைவராக உள்ள கே.பி.முனுசாமி, விழுப்புரம் மாவட்டச் செயலாளராக உள்ள சி.வி.சண்முகம், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வேலுமணி, தங்கமணி, மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர், தென் மாவட்டத்தைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் ஆகியோர் போட்டி போடுகின்றனர். அதில், வட மாவட்டங்களில் செல்வாக்காக உள்ள வன்னியர் சமூக மக்கள் அதிமுக பக்கம் உள்ளனர். ஆனால் ெகாங்கு மண்டலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அவர்கள் மாற்று கட்சிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அவர்களை தக்க வைக்க வேண்டும். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் செல்லாமல், முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி பக்கம் வன்னியர் தலைவர்கள் வருவதற்கு நாங்கள்தான் காரணம் என்று கே.பி.முனுசாமியும், சி.வி.சண்முகமும் பொருளாளர் பதவியை எதிர்பார்க்கின்றனர்.

அதேநேரத்தில் கொங்கு மண்டலத்தில்தான் அதிக எம்எல்ஏக்கள் உள்ளனர். செலவும் நாங்கள்தான் செய்கிறோம். அதனால் பொருளாளர் பதவி எங்கள் சமூக தலைவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வேலுமணியும், தங்கமணியும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். அதேபோல, அதிமுகவில் தற்போது தென் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள முக்குலத்து சமூக தலைவர்கள், நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். கடந்த 4.5 ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் முக்குலத்து சமூக ஆட்சிகளும், அதிகாரிகளும் புறக்கணிக்கப்பட்டு விட்டனர். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் பொருளாளர் பதவி தேவேந்திரகுல வேளாளருக்கு வழங்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முக்குலத்தைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்தது.

தற்போது பன்னீர்செல்வத்தை மாற்றும்போது எங்கள் சமூக தலைவர்களாக விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், உதயகுமார் ஆகியோரில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று கூறி வருகன்றனர். பொருளாளர் பதவிக்கு அதற்குள்ளேயே அடிதடி தொடங்கியுள்ளதைக் கண்டு எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் பொருளாளர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எடப்பாடி பழனிச்சாமி அணிக்குள் எழுந்துள்ளது.

Related Stories: