×

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: பணிகளை செம்மையாக மேற்கொள்ள உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.  சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலைய துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர்   குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட சில அறிவிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, ஆண்டு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்லும் பழநி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், ராமேசுவரம், திருத்தணி ஆகிய கோயில்களில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ₹250 கோடியில் மேம்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இவற்றிற்கான பெருந்திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும், அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா, பங்குனி உத்திர திருவிழா, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை போன்றவை முக்கிய திருவிழாக்களாகும்.  இந்த கோயிலில் சாதாரண நாட்களில் 25 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பக்தர்களும், வார விடுமுறை நாட்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், முக்கிய விழா காலங்களில் 4 லட்சம் முதல் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் வருகின்றனர்.  இந்த கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், நெறிப்படுத்தப்பட்ட பிரகாரம், ஒழுங்கமைக்கப்பட்ட நிழல் மண்டபம், வெளிப்படையான நுழைவாயில்கள், கட்டமைப்பில் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்தல் மற்றும் புதுப்பித்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என மலைக்கோயில், அடிவாரம், பழநி மலை மற்றும் இடும்பன் மலை, இடும்பன் குளம் மற்றும் சண்முகா நதி உள்ளிட்ட பகுதிகளில் ₹153 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஐந்தாம்படை வீடான திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சாதாரண நாட்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், மாத சஷ்டி மற்றும் கிருத்திகை நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், ஆடி கிருத்திகையின் போது 5 லட்சம் பக்தர்களும் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் கோயில் வளாகம், அன்னதான வளாகம், வாகனம் நிறுத்தும் வளாகம்,  மலைப்படிக்கட்டுக்கள் மேம்பாட்டு திட்டங்கள், இளைப்பாறும் மண்டபங்கள், மலையடி மேம்பாட்டுத் திட்டங்கள், மலைப்பாதை உள்ளிட்ட பணிகளை ₹175 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளும் வகையில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பெருந்திட்ட வரைவுகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய ஆலோசனைகளை துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.


Tags : Chief Minister ,MK Stalin ,Department of Hindu Religious Affairs , Published on behalf of the Department of Hindu Religious Affairs Chief Minister MK Stalin's study of Assembly announcements: Order to carry out tasks smoothly
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...