திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை 100 ஆண்டு சாதனைக்கு சமமானது: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், திமுக ஒன்றிய  செயலாளர் ஆர்.ஜெயசீலன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜெயபாலன், த.எத்திராஜ், ஊராட்சி தலைவர்கள் டி.டி.தயாளன், மா.தமிழ்வாணன், எஸ்.சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

இதில், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு 137 நபர்களுக்கு ரூ.42 லட்சத்து 30 ஆயிரத்து 696 மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கி பேசியதாவது;

1967ல் அண்ணா ஆட்சியிலும் 1969 முதல் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியிலும் என 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலமற்ற ஏழை, எளிய மக்களுக்கும் புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியதும் குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டிக்  கொடுத்ததும் திமுக ஆட்சியில் தான். தற்போது திமுக அரசு ஓராண்டு காலத்தில் செய்த சாதனை நூறாண்டுகளின் சாதனைக்கு சமம். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த தாங்கள் இனி தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் சேர்த்து சம்பள பணத்தை சேமித்து வைத்து சொந்தமாக வீட்டு மனை வாங்கி பயன்பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் பாண்டியராஜன், துணை வட்டாட்சியர்கள் சுந்தர், ஜெயஸ்ரீ, அருணா, சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர்கள் கணேஷ், சா.தினேஷ், டில்லிபாபு, சரவணன்,  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், வட்ட தலைவர் என்.சீனிவாசன், செயலாளர் பி.சசிகுமார், பொருளாளர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் ஏ.சேகர், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் எல்.கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் டி.விஸ்வநாத், வட்ட தலைவர் எம்.குமரன், செயலாளர் பரணிதரன், பொருளாளர் குமரேசன், த.சுகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: