×

திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதியில் அண்ணா ஆட்சி காலத்தில் இருந்து நீடித்த பிரச்னைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு: பொதுமக்கள் நிம்மதி

பெரம்பூர்: புளியந்தோப்பு காந்தி நகரில் பொது கழிப்பறை அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை 55 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றப்படுகிறது. அதாவது அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் இருந்த நீடித்த பிரச்னைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் தீர்வு கிடைத்துள்ளது.  

சென்னையின் மைய பகுதியான திரு.வி.க நகர் தொகுதி, 73வது வார்டுக்கு உட்பட்ட புளியந்தோப்பு காந்தி நகரில் இருந்த குடிசை வீடுகள் கடந்த 1967ம் ஆண்டு தீவிபத்தில் எரிந்தன. அப்போது முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா அந்த பகுதியில் உள்ள குடிசை வீடுகளை அகற்றிவிட்டு ஓட்டு வீடுகளை அமைத்து தந்தார். அப்போது அந்த பகுதி பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தது. பின்னர், 1989ம் ஆண்டு பூங்கா நகர் சட்டமன்ற தொகுதியில் சேர்ந்தது. அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரகுமான்கான் இந்த பகுதியில் கழிப்பறைகளை கட்ட முன் வந்தார். ஆனால், அந்த முயற்சிகள் பாதியில் நின்றது.

அதன்பின்பு 2011ம் ஆண்டு தொகுதிகள் பிரிக்கப்பட்டு பூங்கா நகர், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர் ஆகிய தொகுதிகள் பிரிக்கப்பட்டு, திரு.வி.க நகர் தொகுதி உருவாக்கப்பட்டது. அதில் இந்த புளியந்தோப்பு காந்தி நகர் சேர்க்கப்பட்டது. முதன்முதலில் அதிமுகவை சேர்ந்த நீலகண்டன் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காந்திநகர் மக்கள் பலமுறை தங்கள் பகுதிக்கு கழிப்பிட வசதி மற்றும் பாதாள சாக்கடை வசதி செய்து தரக்கோரி மனு அளித்தனர். ஆனால், நடவடிக்கை இல்லை.

அதன் பின்பு 2016ம் ஆண்டு திமுகவை சேர்ந்த தாயகம் கவி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் 10கும் மேற்பட்ட முறை காந்திநகர் பகுதியில் கழிப்பறை வசதி மற்றும் பாதாள சாக்கடை வசதி செய்து தரவேண்டும் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என எம்எல்ஏ வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

அதனை தொடர்ந்து தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் காந்தி நகர் பகுதிக்கு மிக அருகில் பவுடர் மில்ஸ் சாலையில் மின் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் 600 சதுர அடி நிலத்தை முறைப்படி அனுமதி பெற்று, அந்த இடத்தில் திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹26.67 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பறை கட்டப்பட உள்ளது.

இதில், பெண்களுக்கு 4 கழிவறை, ஆண்களுக்கு 4 கழிவறை மற்றும் சிறுநீர் கழிக்க தனி இடம் உள்ளிட்ட  வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் காந்திநகர் மக்களின் 55 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் பணிகள் தொடங்க உள்ளன. விரைவில் இப்பகுதி மக்களுக்கு பாதாள சாக்கடை திட்டம் மற்றும் பட்டா பிரச்னைகளில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி தெரிவித்தார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Thiruvika Nagar Assembly ,Anna , Chief Minister MK Stalin's solution to the problem that has persisted in the Thiruvika Nagar Assembly constituency since the Anna regime: Public peace
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...