×

பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது ₹1.56 கோடியில் குருமலையில் அமைத்த புதிய தார்சாலையால் மக்கள் மகிழ்ச்சி-விரைவில் திறப்பு விழா நடத்த கோரிக்கை

அணைக்கட்டு : குருமலையில் ₹1.56 கோடியில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டதால் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் உள்ள மலைவாழ் மக்கள் விரைவில் தார்சாலைக்கு திறப்பு விழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த குருமலையில் குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல்மலை, பள்ளகொள்ளமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு சாலை வசதியில்லாத நிலையில், உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். எனவே மலைக்கு சாலை வசதி ஏற்படுத்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ₹1.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தார்சாலை போடும் பணிகள் நடந்தது. இதில் மேடு அதிகமாகவும்,  வளைவாகவும் உள்ள பகுதியில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் தரம் குறித்து சென்னையில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் குழு ட்ரோன் கேமரா மூலம் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர்.

பல ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்த மலைவாழ், தற்போது சாலை வசதி ஏற்படுத்தபட்டதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் தார்சாலை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் திறப்பு விழா நடத்தி தார்சாலையை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட  குருமலையில் ஒரு துணை சுகாதார நிலையமும், பக்கத்தில் ரேஷன் கடைக்கும்  தனியாக  கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால்  அப்பகுதியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதேபோல் குருமலை அடிவாரத்தையொட்டி  அமைந்துள்ள கலங்கமேடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள்  வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் ரேஷன் கடை இல்லை. இதனால் 5  கி.மீ. தொலைவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மக்கள் சிரமத்துடன் சென்று  பொருட்களை வாங்கி வருகின்றனர். எனவே கலங்மேடு பகுதியில் தனியாக ஒரு  பகுதிநேர ரேஷன் கடை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

வெள்ளக்கல் மலைக்கும் தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை

குருமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்த வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம், ‘மலைக்கு சாலை வசதி ஏற்படுத்தியது போல், குருமலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலையில் உள்ள வெள்ளக்கல் மலைக்கும் தார்சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்’ என ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை தலைமையில் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து சாலைபோட தேவைப்படும் இடங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிதி ஒதுக்கீடு செய்ததும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. ஊராட்சி செயலாளர் பாஸ்கரன், பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் சாலை அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு செய்து பிடிஒக்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Darsala ,Kurumalai , Dam: Mountaineers happy with 1.56 crore new tar road construction in Kurumalai
× RELATED ரோடு ரோலர் வாகனம் கடைகள், பைக்குகள் மீது மோதி விபத்து