×

ஒற்றைத் தலைமை வேண்டும் என தொண்டர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பது எப்படி அராஜகம் ஆகும்?: பழனிசாமி தரப்பு பா.வளர்மதி பேட்டி..!!

சென்னை: ஒற்றைத் தலைமை வேண்டும் என தொண்டர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பது எப்படி அராஜகம் ஆகும்? என ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அழைப்பின் பேரில் தான் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஓ.பி.எஸ்.சை ஓரங்கட்டவும் இல்லை, அதிமுகவில் அராஜகப் போக்கும் இல்லை.

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும். ஒற்றைத் தலைமை வேண்டும் என தொண்டர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பது எப்படி அராஜகம் ஆகும்? அராஜகம் செய்வது யார் என்பது மக்களுக்கு தெரியும் என கூறினார். இதனிடையே அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழு நடைபெறும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிலேயே இரும்புத் தகடுகள் அமைத்து போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

போலீசின் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. சென்னை வானகரத்தில் 500க்கும் மேற்பட்ட போலீஸ், பொதுக்குழு நடைபெறும் மண்டபம் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். எதிர்ப்பை மீறி பொதுக்குழு நடப்பது உறுதியாகி உள்ளதால் பன்னீர்செல்வம் பங்கேற்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுக்குழுவை புறக்கணிப்பது குறித்து பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : Palanisamy ,Valarmati , Single Leadership, Volunteers, Anarchy, P. Valarmati
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...