×

நசரத்பேட்டை பகுதியில் அடிக்கடி பழுதடையும் போக்குவரத்து சிக்னல்: விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடப்பதற்கு சிக்னல் உள்ளது. இந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் போக்குவரத்து நெரிசலும் காணப்படும். தேசிய நெடுஞ்சாலை என்பதால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் உள்பட தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னைக்கும், சென்னையிலிருந்தும் வந்து செல்கின்றன.  இதனால் நசரத்பேட்டை பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.  

நசரத்பேட்டை, அகரம்மேல், வரதராஜபுரம், மேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சிக்னல் வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலான நாட்கள் இந்த சிக்னல் பழுதடைந்து எரியாமல் உள்ளது.  இதனால் சாலையை கடப்பதில் வயதானவர்கள், மாணவர்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் உள்பட பலர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தேசிய நெடுஞ்சாலை என்பதால் வானங்கள் வேகமாக வருவதாலும், சிக்னல் வேலை செய்யாததாலும் சாலையை கடக்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி இந்த இடத்தில் விபத்துகளும் ஏற்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்து போக்குவரத்தை சரி செய்கின்றனர்.

மற்ற நேரங்களில் போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை. அப்படியே பணியில் இருந்தாலும் வெயில் கொடுமையால் அருகில் உள்ள கடைகளில் தஞ்சம் அடைந்து விடுகின்றனர். மேலும் சிக்னல் அருகிலேயே வாகனங்களை மடக்கி சோதனை செய்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே நசரத்பேட்டை சிக்னலை உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இந்தப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக மேற்கொண்டு விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும்பாலான நாட்கள் இந்த சிக்னல் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் சாலையை கடப்பதில் வயதானவர்கள், மாணவர்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் உள்பட பலர் பெரும்  சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

Tags : Nasarapet , Frequent malfunctioning traffic signal in Nasarapet area: Motorists in fear of accident
× RELATED நசரத்பேட்டையில் 2 கோடி ஆக்கிரமிப்பு...