×

அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக எங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கேவியட் மனு

புதுடெல்லி: ‘அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்கும் போது, எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது’ என ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. முப்படைகளில் இளைஞர்களை சேர்க்கும் புதிய அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இத்திட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் சேதமாவதை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கக் கோரியும், அக்னிபாதை திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்கக் கோரியும் மூத்த வழக்கறிஞர்கள் விஷால் தீவாரி, எம்.எல்.ஷர்மா மற்றும் ஹர்ஷ் அஜய்சிங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக 3 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் ஆலோசனை பெற்று பட்டியலிட்டு விசாரிப்படும் என உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வு நீதிபதி சி.டி.ரவிக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘அக்னிபாதை திட்டம் தெளிவான ஆய்வுக்கு பிறகு தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு எதிராக மூன்று மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை பட்டியலிட்டு விசாரிக்கும் போது ஒன்றிய அரசு தரப்பின் வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவுகளையும் நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கடற்படையில் ஆட்சேர்ப்பு: இன்றே அறிவிப்பு வெளியீடு
நாடு முழுவதும் போராட்டத்துக்கு இடையே நாளை மறுநாள் முதல் அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப்படையில் ஆட்சேர்ப்பு பணி தொடங்க உள்ளது. இந்நிலையில், கடற்படைக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு 25ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, இன்றே அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அக்டோரில் வீரர்கள் தேர்வு முடிந்து, நவம்பரில் வீரர்கள் படையில் இணைக்கப்படுவார்கள் என்றும் கடற்படை அறிவித்துள்ளது.  
வீரதீர விருதும் உண்டு:  முப்படை வீரர்களை போலவே, சிறப்பாக செயல்படும் அக்னி வீரர்களுக்கும் வீர தீர செயலுக்கான  விருது வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

* முப்படை தளபதிகளை டிஸ்மிஸ் செய்ய வழக்கு
வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில், ‘அக்னிபாதை திட்டம் என்பது அரசு சார்ந்த ஒன்றாகும். ஆனால், இந்த திட்டத்திற்கு முப்படை தளபதிகளும் ஆதரவு தந்துள்ளனர். ராணுவ சட்டம் 1957ன் படி இதுபோன்று செய்யக் கூடாது. அதனால், அக்னிபாதை விவகாரத்தில் முப்படை தளபதிகளும் அரசியல்வாதிகளை போன்று செயல்பட்டுள்ளனர் என்பதால் அவர்கள் மூன்று பேரையும் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Tags : Union Government Caveat ,Supreme Court , No order should be issued without asking us against the Fire Path project: Union Government Caveat Petition in the Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...