×

மதுரை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்களை கொண்டு செல்வதற்காக, சிறு மாறுதல் செய்யப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சரக்கு ரயிலின் பெட்டிகளில் டிராக்டர்களை ஏற்றுவதற்கு முன்பு, மதுரையில் பராமரிப்பு செய்யப்படுவது வழக்கம். இப்பணிகளுக்காக நேற்று அதிகாலை 1.20 மணியளவில் கூடல்நகர் ரயில் நிலையத்தில் இருந்து, இந்த சரக்கு ரயில், மதுரை ரயில் நிலையத்திற்கு புறப்பட்டது. மதுரா கோட்ஸ் மதில் சுவர் அருகே மதுரை ரயில் நிலையத்தில் 3வது நடைமேடைக்கு மாறும் இடத்தில், திடீரென இந்த சரக்கு ரயில்களின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. தகவலறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக சீரமைப்பு பணிகள் துவங்கி, அதிகாலை 5.50 மணியளவில் நிறைவடைந்தன. சென்னையில் இருந்து அதிகாலை வரும் ரயில்களில் பெரும்பாலானவை முதலாவது நடைமேடைக்கே வருகின்றன. இதனால்  வழக்கமான ரயில் போக்குவரத்து ஏதும் பாதிக்கப்படவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


Tags : Madurai , Freight train derails at Madurai railway station
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...