×

திருக்கோயில்களில் திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புத்தாடை பரிசு: அமைச்சர் சேகர்பாபு அசத்தல் அறிவிப்பு..!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருக்கோயில்களில் நடைபெறும் மாற்றுதிறனாளிகளின் திருமணத்திற்கு மணமக்களுக்கு புத்தாடைகள் அந்தந்த திருக்கோயில் சார்பாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த 2021-2022 சட்டமன்ற மானியக் கோரிக்கையில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் திருக்கோயில்களில் திருமணம் செய்திட கட்டணமில்லா திருமணத் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 08.12.2021 அன்று தொடங்கி வைத்து மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களுடன் பரிசு பொருட்களை வழங்கிச் சிறப்பித்தார்கள். அதனை தொடர்ந்து, சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் மாற்று திறனாளி திருமணத்திற்கு மணமகன் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் மணமகள் எஸ்.மோனிஷா ஆகியோர்களுக்கு  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

2022 - 2023 ம் ஆண்டு சட்டமன்ற மானியக்கோரிக்கையின் திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றி திருக்கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையின்றி திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து திருக்கோயில்களில் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்கு திருக்கோயில் சார்பாக புத்தாடைகள் வழங்கப்பட வேண்டும் என்றும்  இத்திட்டத்தினை செயல்படுத்த தேவையான நிதியினை திருக்கோயில் வரவு செலவு  திட்டத்தில் ஒதுக்கீடு செய்யவும்  திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Puttadai ,Minister ,Sekarbabu , Temple, Disabled, Marriage, Puttaparthi
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...