லக்னோ: நுபுர் சர்மா விவகாரத்தில் அமைச்சர்களுக்கு வாய்ச்சவடால் வேண்டாம் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்ததால், உத்தரபிரதேசம் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது கருத்துக்கு இஸ்லாமிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக அமைச்சர்களுக்கு முதல்வர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘நுபுர் சர்மா விஷயத்தில், மாநில அமைச்சர்கள் கருத்துகள் எதுவும் தெரிவிக்க வேண்டாம்.
வாய்ச்சவடால் பேசாமல், பொது அமைதியை யாராவது சீர்குலைக்க முயற்சிக்கிறார்களா? என்பதை அமைச்சர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். அதேநேரம் ராம்பூர் மற்றும் அசம்கர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் கவனம் செல்லுமாறு அமைச்சர்களை முதல்வர் யோகி கேட்டுக் கொண்டார்’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.