×

மருத்துவ மேற்படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியது ஏன்? மாஜி செயலருக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: மருத்துவ மேற்படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு தொடர்பான தீர்ப்பை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது. 2020-21ம் கல்வியாண்டுக்கு மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 113 காலி இடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார், கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி சிபிசிஐடி போலீஸ் தரப்பில்  பிரச்னைக்குஅப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் காரணம். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த முறைகேட்டில் தொடர்புடைய அடையாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபர்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யும்படியும், மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்தவும் சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, செல்வராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்லூரிகள்தான் அதிக கட்டணம் வசூலித்தன. ஆனால் தேர்வுக்குழு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டை செல்வராஜனிடம் வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் எந்த கல்லூரிக்கும் சாதகமாக செயல்படவில்லை என்று தெரிவித்தார். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, 2021ல் தவறு நடந்துள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏழு கலந்தாய்வுகள் நடத்திய நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியது ஏன். இதன் மூலம் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக தேர்வுக்குழு செயலாளர் செயல்பட்டுள்ளார் என்று தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Tags : ICourt , Why did the medical superintendent conduct two consultations for administrative allotments? ICourt question to former Secretary
× RELATED தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை...