பாரிஸ்: டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் நீண்ட காலமாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், தற்போது 3ம் இடத்திற்கு இறங்கியுள்ளார். ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் முதலிடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ் 2ம் இடத்திலும் உள்ளனர்.
ஏடிபி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த செர்பிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச், முறையாக கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாததால், இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து பாரிசில் நடந்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலிடம், ஜோகோவிச் தோல்வியடைந்தார்.
இந்த தோல்விகளால் அவர் தற்போது ஏடிபி தரவரிசையில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தரவரிசையில் 2ம் இடத்தில் இருந்த ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ், கடந்த வாரம் நெதர்லாந்தில் நடந்த லிபமா ஓபன் டென்னிசில் ரன்னர் கோப்பையை வென்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் தற்போது ஏடிபி தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். நேற்று வெளியான ஏடிபி தரவரிசை பட்டியலில் டேனில் மெட்வடேவ் 7,950 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ் 7,075 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், ஜோகோவிச் 6,770 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.