சொகுசு மதுபான விடுதிகளுக்கு புதுச்சேரியிலிருந்து கடத்தி வந்த உயர்தர பீர் வகைகள் பறிமுதல்

சென்னை:  சொகுசு மதுபான விடுதிகளுக்கு பாண்டிச்சேரியிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட உயர்தர பீர் வகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் செயல்படும் பல்வேறு சொகுசு மதுபான விடுதிகளுக்கு, ஒரு கும்பல் பாண்டிச்சேரியிலிருந்து பீர் மற்றும் சரக்கு வகைகளை கடத்தி வந்து சப்ளை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலையில் நேற்று எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போக்குவரத்து போலீசார் உட்பட 7க்கும் மேற்பட்ட காவலர்கள்  வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது, அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது, அதில் அட்டைப் பெட்டிகளில் பண்டல் பண்டலாக பார்சல்கள் இருந்தன. இதுகுறித்து காரில் வந்த நபரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். மேலும் போலீசாரை தள்ளிவிட்டு ஓட முயற்சி செய்தபோது அவரைப் பிடித்தனர்.

பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், சேத்துப்பட்டு மெக்கானிக்கல் சாலையை சேர்ந்த சோனு சிங் (41) என்பதும், இவர் ராயபுரத்தில் இருந்து ஒரு கும்பலிடம் பாண்டிச்சேரியில் விற்கப்படும் உயர் ரக பீர் பாட்டில்களை கொண்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், இவர்கள் முழுக்க முழுக்க வாட்ஸ்அப் கால் மூலம் பேசி பாண்டிச்சேரியிலிருந்து சரக்கை கொண்டு வந்து, அதனை ராயபுரத்தில் வேறு ஒரு நபருக்கு மாற்றி விட்டு,  அதன்பின்பு சோனு சிங் மூலம் அந்த சரக்குகளை பெற்று  மாதவரத்தில் உள்ள மற்றொரு நபரிடம் சேர்க்க முயன்றபோது போலீசாரிடம் பிடிபட்டதும் தெரியவந்தது.  மேலும் விசாரணையில், அண்ணாநகரை சேர்ந்த சரவணன் என்பவர், ஆட்களை வைத்து பாண்டிச்சேரியிலிருந்து மதுபானங்களை காரில் கடத்தி வந்து, அதனை சோனு சிங் மூலமாக மாதவரத்தில் சேர்ந்த ராஜா என்பவருக்கு கைமாற்றி விட்டு பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.   இதனையடுத்து சோனு சிங் காரில் கொண்டு வந்த 2,430 பாட்டில் மதுபானம் மற்றும் டின் வகை பீர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள  சரவணன், ராஜா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: