வியாசர்பாடி ஏ.ஏ.சாலை சந்திப்பு அருகே சாலையில் கொட்டப்படும் குப்பை, கட்டிட கழிவுகள்: பொதுமக்கள் அவதி

பெரம்பூர்: சென்னையில் பாழடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படும்போது என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி தெளிவாக வரையறை கொடுத்துள்ளது. அதன்படி, கட்டிடங்களை இடிப்பவர்கள் கட்டிட கழிவுகளை எங்கு கொட்ட வேண்டும், சாலையில் குவித்து வைக்க கூடாது, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் அகற்ற வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், என அறிவுறுத்தி உள்ளது. அவ்வாறு பெரிய பெரிய கட்டிடங்கள் இடிக்கப்படும்போது அந்த கட்டிட கழிவுகளை மொத்தமாக ஒரு சில நிறுவனங்கள் வாங்கி அதை பிரித்து, தங்களுக்கு தேவையான பொருட்களை அதிலிருந்து எடுத்துக் கொண்டு மற்ற கட்டிட கழிவுகளை, அதற்கெனறு மாநகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் கொட்டி வருகின்றனர். அந்த வகையில் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதற்கு என்று தனியாக கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தனி இடம் உள்ளது.

அதில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, அதனை பொடியாக்கி ஹாலோ பிளாக் கல் உள்ளிட்ட பல்வேறு மறுசுழற்சி முறைக்கு மாநகராட்சி அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சிறிய அளவில் இடிக்கப்படும் கட்டிடங்களில் இருந்து வரும் கட்டிடக் கழிவுகளை இரவு நேரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், பெரம்பூர் தொகுதி, 45வது வார்டுக்கு உட்பட்ட வியாசர்பாடி ஏ.ஏ.சாலை சந்திப்பு பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் குடியிருப்புக்கு செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் பலர் கட்டிட கழிவுகளை கொட்டியுள்ளனர். இதனால் அந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது.

இந்த கட்டிட கழிவுகளில் பலரும் சிறுநீர் கழித்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இரவு நேரங்களில் ஓட்டல்களின் உணவு கழிவுகளும் அதே பகுதியில் கொட்டப்பட்டுவதால், சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்தை ஆய்வு செய்து, சாலையில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளை அகற்றவும், அங்கு குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: