கள்ளக்காதல் விவகாரத்தால் விபரீதம் கார் டிரைவரை கடத்தி கழுத்தை நெரித்து கொலை; கை,கால்களை துண்டாக வெட்டி மூட்டை கட்டி மதுராந்தகம் அருகே உடல் எரிப்பு: தலைமறைவான போலீஸ் ஏட்டு உள்பட 6 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தால் சென்னை கார் டிரைவர் ஒருவரை மதுபானம் கொடுத்து கழுத்தை நெரித்து  போலீஸ் ஏட்டு ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும், கொலை செய்த நபரின் கைகள், கால்களை துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி நண்பர்கள் உதவியுடன் காரில் எடுத்து சென்று மதுராந்தகம் அருகே பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.

   

சென்னை கே.கே.நகர் விஜயராகவாபுரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ரவி (26). இவர் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். எம்எம்டிஏ காலனியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் கார் டிரைவராக ரவி வேலை செய்து வந்தார். அவரது மனைவி ஐஸ்வர்யா கே.கே.நகர் சத்யா கார்டனில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக வேலை செய்து வருகிறார்.

ரவி வீட்டின் அருகே கோயம்பேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். செந்தில்குமார் பணி மாறுதல் காரணமாக கடந்த மே 23ம் தேதி முதல் செம்பியம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். செந்தில்குமாரை கடந்த மே 28ம் தேதி பாதுகாப்பு பணிக்கு செல்லுமாறு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் அவர், வீட்டில் முக்கிய விசேஷம் இருப்பதாக கூறி விடுமுறையில் சென்றுள்ளார். இதற்கிடையே கடந்த 31ம் தேதி இரவு செந்தில்குமார் அவசர அவசரமாக வீட்டை காலி செய்தார்.

ரவியின் மனைவிக்கு கடந்த 31ம் தேதி இரவுப்பணி என்பதால் அவர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். வீட்டில் கணவர் ரவி மட்டும் தனியாக இருந்தார். கடந்த 1ம் தேதி அதிகாலை 4 மணிக்கு போலீஸ் சீருடையில் 3 பேரும், சாதாரண உடையில் 2 பேரும் வந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வருவதாக கூறி ரவியை அழைத்து சென்றுள்ளனர்.

 

காலையில் பணி முடிந்து வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா, கணவரை போலீஸ் அழைத்து சென்றது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். கோயம்பேடு காவல்நிலையத்திற்கு சென்று விசாரித்துள்ளார். காவல் நிலையத்தில் இருந்த போலீசார் ‘நாங்கள் யாரையும் விசாரணைக்கு அழைத்து வரவில்லை’ என்று கூறியுள்ளனர். உடனே கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி ரவியை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே, பழையனூர் பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் ஒரு கோணிப்பையில் கட்டிய உடல் அங்கு கிடந்த காய்ந்த பனங்காய் குடுக்கையை வைத்து எரித்த நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்படி படாளம் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் எரிந்த நிலையில் இருந்ததால், கொலை செய்யப்பட்ட நபர் ஆணா அல்லது பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தது. உடல் எரிக்கப்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் திருநங்கைகள் அதிகளவில் நடமாட்டம் இருக்கும் என்பதால் கொலை செய்யப்பட்ட நபர் திருநங்கையாக இருக்கலாம் என்ற கோணத்தில் முதலில் போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆனால், விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் திருநங்கை கிடையாது என்று உறுதியானது. பின்னர் எரித்து கொலை செய்யப்பட்ட நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இதற்கிடையே தனிப்படையினர் சென்னையில் காணாமல் போன நபர்களின் பட்டியல் மற்றும் புகைப்படங்களை வைத்து விசாரணை நடத்தினர். மேலும், எரித்து கொலை செய்யப்பட்ட நபரின் அங்க அடையாளங்களை வைத்து ஒப்பிட்டு பார்த்த போது, கே.கே.நகர் காவல்நிலைய எல்லையில் காணாமல் போன கார் டிரைவர் ரவியின் உடலுடன் ஒத்துப்போனது. அதை அவரது மனைவி மற்றும் உறவினர்களும் உறுதி செய்தனர்.

இதைதொடர்ந்து தனிப்படையினர் கார் டிரைவர் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், செம்பியம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் செந்தில்குமார், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து கவிதா என்ற பெண் ஒருவருடன் கொலை செய்யப்பட்ட ரவி வசித்து வரும் வீட்டின் அருகே குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஒரே இடத்தில் இருவரும் வசித்து வந்ததால் ரவியும் செந்தில்குமாரும் நல்ல நண்பர்களாக பழகியும் ஒன்றாக மதுபானம் அருந்தியும் வந்துள்ளனர். ஆனால் செந்தில்குமாரின் காதலியுடன் ரவிக்கும் ரகசிய தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. செந்தில்குமார் பணிக்கு சென்ற பிறகும், ரவியின் மனைவி ஐஸ்வர்யா இரவு பணிக்கு சென்றதும், இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

இந்த பிரச்னையால் செந்தில்குமாருக்கும், ரவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேநேரம் ரவியின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு இந்த சம்பவம் தெரிந்ததால் காவலர் காதலி கவிதாவுக்கும் இடையேயும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த 1ம் தேதி அதிகாலை செந்தில்குமார் தனது நண்பர்கள் மூலம் ரவியை கடத்தி கொடூரமாக கொலை செய்து உடலை மதுராந்தகம் அருகே பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. அதன் பிறகு தலைமை காவலர் செந்தில்குமார் தனது நண்பர்களுடன் தலைமறைவானது தனிப்படையின் விசாரணையில் உறுதியானது.

இந்த கொலை தொடர்பாக செந்தில்குமார் காதலி கவிதாவை கே.ேக.நகர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கவிதா முன்னுக்குப்பின்முரணாக கொலை குறித்து தகவல்கள் அளித்து வருகிறார். இதனால் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொலைக்கு காரணமான செந்தில்குமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் 5 பேர் என மொத்தம் 6 பேரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் தலைமை காவலர் ஒருவர் கார் டிரைவர் ஒருவரை நண்பர்களுடன் கடத்திச்சென்று கொடூரமாக கொலை செய்து எரித்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார் டிரைவரை கொலை செய்தது ஏன்?: ஏட்டுவின் காதலி கவிதா பரபரப்பு வாக்குமூலம்

கார் டிரைவர் ரவிக்கும் எனக்கும் உள்ள தொடர்பால் அடிக்கடி ரவியின் மனைவி ஐஸ்வர்யா என்னிடம் தொடர்ந்து சண்டை போட்டு வந்தார். ஐஸ்வர்யா வேண்டுமென்றே தனது மகளை மலம் மற்றும் சிறுநீர் கழிக்குமாறு நாங்கள் நடந்து செல்லும் பாதையில் விடுவார். அதன்படி கடந்த 31ம் தேதி நாங்கள் நடந்து செல்லும் பாதையில் ஐஸ்வர்யா தனது மகளை சிறுநீர் மற்றும் மலம் கழிக்க செய்தார். இதுகுறித்து எனது காதலன் செந்தில் குமார் ரவியை அழைத்து கூறியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது ரவி, செந்தில்குமாரை பார்த்து திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்துவது குறித்து கேவலமாகவும், கிண்டலாகவும் கூறி அவமானப்படுத்தினர். இதை அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து சிரித்தபடி இருந்தனர். இது எங்களை மிகவும் பாதித்தது. இதனால் ரவியை கொலை செய்யும் அளவுக்கு எங்களை அழைத்து

சென்றது.

எனவே ரவியை கொலை செய்யும் நோக்கில் செந்தில்குமார் தனது நண்பர்கள் 5 பேரை போலீஸ் போல் அவரது வீட்டிற்கு சென்று அழைத்து வந்து சமாதானம் படுத்துவது போல் மதுபானம் கொடுத்து கேட்டபோது மீண்டும் போதையில் கேவலமாக ரவி பேசினார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் ரவியின் கழுத்தை நெரித்து கீழே தள்ளி காலை வைத்து நெரித்து கொலை செய்தார். பிறகு உடலை ஒரு கோணியில் கட்டி வைத்தோம். இந்த கொலையை மறைப்பதற்கு ஏற்கனவே திட்டமிட்டப்படி வீட்டை காலி செய்வது போல் ஆம்னி வேனில் வீட்டில் உள்ள பொருட்களை ஏற்றுவது போல் உடலை ஏற்றி செங்கல்பட்டு நோக்கி சென்றோம். மாமண்டூர் அருகே சென்ற போது உடலை எரித்து விடலாம் என்று முடிவு செய்து அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் மற்றும் கடையில் சர்க்கரையை வாங்கினோம்.

மதுராந்தகம் அருகே பழையனூர் தேசிய நெடுஞ்சாலையோரம் ஆம்னி வேனை நிறுத்தி மூட்டையாக கட்டிய ரவியின் உடலை இறக்கி அவரது கைகள், கால்களை தனித்தனியாக வெட்டி பனங்காய் குடுக்கையில் உடலை வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தோம். பிறகு வாங்கிய சர்க்கரையை உடல் மீது கொட்டினோம். தீ கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது நாங்கள் அனைவரும் சிறிது நேரம் உடல் எரிவதை பார்த்து விட்டு செந்தில்குமார் அவரது நண்பர்களுடன் ஆம்னி வேனில் சென்று விட்டார். நான் பேருந்து மூலம் சென்னை வந்தேன். கொலை செய்து 10 நாள் ஆனதால் எங்களை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று நினைத்தோம். யாருக்கும் சந்தேகம் வராதபடி தான் நான் மட்டும் சென்னையில் இருந்தேன். ஆனால் போலீசார் எப்படியே எங்களை மோப்பம் பிடித்து என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு கவிதா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: