×

திறமையையும் பாலினத்தையும் ஒப்பிடாதீர்கள்

நன்றி குங்குமம் தோழி

இயக்குநர் நந்தினி

‘‘நாம் அம்மாவின் கருவறையில் இருக்கும் போது, அது ஆண் அல்லது பெண்ணாக இருக்க வேண்டும் என்று யாராலும் முடிவு செய்ய முடியாது. ஆண் குழந்தையாக பிறந்தாலும் பெண் பிள்ளையாக வளர்ந்தாலும், நம்முடைய சமுதாயத்தில் இருவருக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு. குறிப்பாக இந்த
கட்டுப்பாடுகள் பெண்களுக்கு அதிகம். அவள் வளர வளர... ஆடை அணிவது முதல் பேசுவது வரை எல்லாமே அவளுக்கு என தனியாக வரையறைப்பட்டுள்ளது. அந்த தருணத்தில் தான் அவள் தன் பாலினத்தை பற்றி உணர்கிறாள்.

பெற்றோர்கள் மட்டுமில்லாமல், நம் சமூகமும் அப்படித்தான் நம்மை வளர்க்கிறார்கள். ஆனால் இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் எடுப்பதற்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் தேவை இல்லை. ஆர்வமும் திறமையும் இருந்தால் மட்டும் போதும், யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்’’ என்கிறார் இயக்குநர் நந்தினி.

‘‘சொந்த ஊரு சென்னை. என்னுடைய சின்ன வயசுல இருந்தே ஒரே ஒரு கோல் தான். இயக்குநர் ஆக வேண்டும் என்பது. என்னதான் நாம் மார்டர்ன் உலகுக்கு மாறி வந்தாலும், இன்றும் பெண்கள் சினிமா துறைக்கு போவது என்றால் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பதில் சிக்கல் ஏற்படும். எனக்கும் எங்க வீட்டில் சினிமா இயக்குநர் என்று சொன்னதும் எந்த ஒரு பேச்சே இல்லாமல் மறுப்பு தெரிவிச்சாங்க.

அதன் பிறகு அவர்களை பெரும் போராட்டத்திற்கு பிறகு தான் சம்மதிக்க வச்சேன். அடையாறில் உள்ள பிலிம் மேக்கிங் நிறுவனத்தில் பகுதி நேரமாக படித்துக்  கொண்டே என்னுடைய இயக்குநர் வேலையை செயல்படுத்த துவங்கினேன். அதன் முதல் கட்டமாக குறும்படங்களை இயக்க ஆரம்பிச்சேன்.

நான் எடுத்த குறும்படங்கள் பேசப்பட்டன. அதனால் நான் மற்ற இயக்குநர் கண்களுக்கு தென்பட ஆரம்பிச்சேன். நான் இயக்கிய குறும்படத்திற்கு சிறந்த இயக்குநர் என்ற விருது கிடைச்சது. அதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கையால் தங்கப் பதக்கம் பெற்றேன். அதுவே எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.

அதன் பிறகு அதே வருடத்தில் மேலும் இரண்டு குறும்படங்களை இயக்கினேன். அதற்கு மாநில அளவில் விருது கிடைச்சது. அப்போது தான் எங்க வீட்டில் என்னை முழுமையா நம்ப ஆரம்பிச்சாங்க. நானும் சினிமா என்று சும்மா இல்லாமல், என்னுடைய திறமையை வெளிப்படுத்துகிறேன்னு என் மேல் எங்க வீட்டு மக்களிடம் ஒரு அபிப்ராயம் ஏற்பட்டது’’ என்றவர் வெள்ளித்திரையில் துணை இயக்குநராகவும் வேலை பார்த்துள்ளார்.

‘‘குறும்படங்கள்... எனக்கு வெள்ளித்திரைக்கு ஒரு பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. ‘கண்ட நாள் முதல்’ படத்தில் இணை இயக்குநரா வேலைப் பார்க்கும் வாய்ப்பு வந்தது. இது நாள் வரை குறும்படத்தை இயக்கி வந்த எனக்கு வெள்ளித்திரை எப்படி இயங்கும் என்ற அனுபவம் அதன் மூலம் கிடைச்சது. இவையெல்லாம், என்னுடைய உழைப்புக்கு கிடைச்ச பரிசுன்னு தான் நான் சொல்வேன். இதற்கிடையில் நான் எனக்கான ஒரு கதை உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். அதற்கு நான் எடுத்துக் கொண்ட அவகாசம் இரண்டு வருஷம்.

அதற்கிடையில் சும்மா இருக்கக்கூடாது என்பதற்காக விளம்பர படங்களை இயக்கி வந்தேன். . தயாரிப்பாளர்கள் படம் கலகலப்பாகவும் காமெடி நெடி இருக்க வேண்டும் என்று விரும்பியதால், ‘திரு திரு துறு துறு’ படமாக்கப்பட்டது’’ என்றவர் இல்ல வாழ்க்கைக்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார்.

‘‘சினிமா, குறும்படம், விளம்பர படம் என்று என் வாழ்க்கை நகர்ந்து கொண்ட இருந்த போது, எங்க வீட்டில் எனக்கு கல்யாணப் பேச்சை எடுத்தாங்க. அவங்க விருப்பத்திற்கு நான் தடை சொல்ல விரும்பல. கல்யாணம்,  குடும்பம், குழந்தைகள்னு என் சினிமா வாழ்க்கையை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு இவர்களுக்கான நேரத்தை ஒதுக்கினேன்.

இந்த அனுபவங்களை அந்த குறிப்பிட்ட காலத்தில் அனுபவிக்கவில்லை என்றால் என்றுமே கிடைக்காது. என் மகளின் முதல் பேச்சு, அவளுடைய முதல் அடி... என எதையும் நான் இழக்க விரும்பவில்லை. அந்த நேரத்தில் எனக்கு நேரம் அதிகம் இருந்ததால், குழந்தையை பார்த்துக் கொண்டே நிறைய புத்தகங்கள் படிச்சேன். கதை எழுதினேன். ‘சிவப்புக்கல்’ என்ற கிராபிக் நாவல் எழுத தொடங்கினேன். அந்த நேரத்தில் வெப்சீரீஸ் டிரண்டானதால், தயாரிப்பாளர்கள் வெப் சீரீயசுக்கான கதையை எழுத சொல்லிக் கேட்டார்கள். டிராமா, காமெடி, காதல் சேர்ந்த ‘நிலா நிலா ஓடி வா’ என்ற திரில்லர் வாம்பயர் படத்தை எழுதினேன்.

இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இரண்டு கதை எழுத ஆரம்பித்து இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒரு படம் எடுத்தாலும் மக்கள் ரசிக்கும் படி எடுக்க வேண்டும்’’ என்றார். ‘‘இன்று வரை எல்லா பெண் இயக்குநரிடமும் கேட்கப்படும் கேள்விகள். ஒரு பெண்ணாக... இயக்குநராக எப்படி? என்ன மாதிரியான பிரச்னைகள் தாண்டி வந்தீங்கன்னு என்பது தான். எந்த துறையாக இருந்தாலும் திறமை இருந்தால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும். சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.

அதையும் சமாளிக்க தெரிந்து கொள்ளணும். சினிமா துறை மட்டுமில்லை, எல்லா துறையிலும் வேலைப் பார்க்கும் ெபண்கள் ஏதாவது ஒரு சங்கடங்களை சந்திக்கத்தான் செய்கிறார்கள். அதை எல்லாம் நாம் யோசித்துக் கொண்டு இருந்தால், நம்முடைய இலக்கை அடையவே முடியாது. பிரச்சனைகள் இல்லாத இடமே இல்லை.

அதனை தாண்டி வருவது தான் சவால். என்னைப் பொறுத்தவரை மக்கள் மத்தியில் என் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அது எனக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். திறமையையும் -பாலினத்தையும் ஒப்பிடாதீர்கள்’’ என்றார் இயக்குநர் நந்தினி.

தொகுப்பு: ஆனந்தி ஜெயராமன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED கனவு மெய்ப்பட வேண்டும்!