×

கனவு மெய்ப்பட வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

‘‘காணக் கிடைக்காத காட்சிகளை கண் முன் நிறுத்துவது’’, ‘‘நிகழ்ந்தவைகளை நிழற்படமாக்கி பொக்கிஷங்களாக கொடுப்பது’’ என புகைப்படங்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். புகைப்படங்கள் மீது ஆர்வம் இல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டாங்க. அதற்கென தனிப்பட்ட படிப்புகளை கல்லூரிகள் வழங்கி வந்தாலும், இது ஆண்கள் மட்டுமே படிக்கக்கூடியது. பெண்களுக்கான துறை கிடையாது என்று இன்றும் ஒரு சொல் உள்ளது.

ஆனால் இந்த துறை மேல் ஆர்வம் இருக்கும் பெண்களில் ஒரு சிலரால்தான் தங்களின் கனவினை நினைவாக்க முடிகிறது. பலருக்கு ஒரு கனவாகவே இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படத்திற்கும், படம் எடுக்கப்படும் கேமராவிற்கும் ஆண்-பெண் பேதம் கிடையாது என்று எடுத்துக்கூறி, ஆர்வம் இருக்கும் பெண்களுக்கு புகைப்பட துறைப் பற்றி முழுமையாக கற்றுக் கொடுத்து அவர்களை புகைப்பட கலைஞர்களாக உருவாக்கி வருகிறார் ‘சென்னை போட்டோ பைனாலே அறக்கட்டளை’யின் இணை நிறுவனர் காயத்ரி நாயர்.

‘‘கனவு மெய்ப்பட வேண்டும்’’ என்பது வெறும் வார்த்தைகள் கிடையாது. அது மற்றவர்களின் வாழ்க்கைக்கான கனவினை நிறைவேற்றும் இடமாகத்தான் பார்க்கிறோம்’’ என பேசத் துவங்கிய காயத்திரி ஒரு பொறியியல் பட்டதாரி. ‘‘என் அப்பாவின் வேலை காரணமாக நாங்க ஒவ்வொரு ஊராக மாற்றலாகிக் கொண்டு இருப்போம். அப்போது இருந்தே எனக்கு புகைப்படம் எடுக்க பிடிக்கும். பிடிச்சது போட்டோகிராபினாலும், படித்தது பொறியியல்.

அதனால் புகைப்படம் எடுப்பதை நானாகவே கற்றுக்கொண்டேன். வீட்டிலும் ஆதரவு கொடுக்க முழுமையாக புகைப்படத் துறையை பற்றி தெரிஞ்சுக் கொள்ள முடிந்தது’’ என்றவர் 2015ம் ஆண்டு முதல் கோத்தே நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் பல பகுதிகளில் கலை மற்றும் புகைப்பட துறையினை கொண்டு வருவதில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலம் இளம் பெண் புகைப்பட கலைஞர்களை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

பெண் புகைப்பட கலை ஞர்களை உருவாக்க ஆர்வம் காட்டும் காரணத்தைப் பற்றி கேட்ட போது, ‘‘எனக்கு போட்டோகிராபி பிடிச்சாலும் அதனை முறையாக கல்லூரிக்கு சென்று படிக்க முடியவில்லை.நானாகத்தான் ஒவ்வொன்றையும் கற்றுக்ெகாண்டேன். என்னுடைய சுய விருப்பமே இந்த துறை மீது இந்த அளவிற்கு ஆர்வம் ஏற்பட வைத்திருக்கிறது என்றால், ஆர்வமுள்ள பெண்களுக்கு முறையாக சொல்லிக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. சில பெண்களுக்கு இந்த துறை கனவாக இருக்கும். அவர்களின் கனவினை நினைவாக்க துவங்கப்பட்டது தான் இந்த புரோகிராம்’’ என்றவர் அதன் செயல்பாட்டினைப் பற்றி விவரித்தார்.

‘‘புகைப்பட துறையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவு. சென்னையில் விஷுவல் கம்யூனிகேஷன் அல்லது திரைத்துறை சார்ந்த படிப்பை படிக்க பல கல்லூரிகள் உள்ளன. ஆனால் வெளி மாவட்டங்களில் அப்படியில்லை. அங்கு சில கல்லூரிகள் இந்தப் படிப்பை வழங்கி வந்தாலும், குடும்பச்சூழல் காரணமாக அங்கு இருக்கும் பெண்கள் அவர்கள் விருப்பப்பட்டதை படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. பல எதிர்ப்புகளை தாண்டிதான் இதில் கால் பதிக்கிறார்கள். அவர்களுக்காகவும், பெண் புகைப்பட கலைஞர்களை அதிகரிக்கும் நோக்குடனும் ஸ்டுடியோ ஏ,எஸ்பிஐ எட்ஜ் மற்றும் சிபிபி ஃபவுண்டேஷனுடன் இணைந்து 2020ல் ஆரம்பித்தோம்.

இதற்கு முன், நான் ஆரம்பித்த அறக்கட்டளை வாயிலாக 2016 முதல் புகைப்படம் எடுப்பது, அது சார்ந்த வர்க் ஷாப்புகள் நடத்துவது, அதற்கான பாடத்திட்டங்களை வகுப்பது, இளம் கலைஞர்களை ஊக்குவித்து அவர்களின் திறனை வெளிக்கொணர்வது என பல வகையில் செயல்பட்டு வந்தோம். 2020ல் ஆரம்பித்த கனவு மெய்ப்பட வேண்டும், பெண்களுக்கான ஒரு வருட புகைப்பட புரோகிராம். இதுவரையில் 3 பேட்ச் பெண் புகைப்பட கலைஞர்களை உருவாக்கியுள்ளோம். அவர்கள் பல்வேறு குடும்ப பின்னணியில் இருந்தாலும், சென்னையில் எட்டு மாதம் தங்கி இந்தப் பயிற்சியினை எடுக்க, உணவு, இருப்பிடம் மற்றும் கேமரா அனைத்தையும் நாங்களே வழங்குகிறோம்.

இது அரசு சாரா அமைப்பு. பலர் நிதியுதவி செய்து வருகிறார்கள். எட்டு மாதத்தில் போட்டோகிராபி, வீடியோகிராபியுடன் அவர்களின் தனித்தன்மை, தன்னம்பிக்கை மற்றும் சுய சிந்தனையை வளர்த்துக் கொள்ளவும் சொல்லிக் கொடுப்போம். மேலும் திரை மற்றும் புகைப்பட துறை சார்ந்தவர்களைக் கொண்டும் சிறப்பு வகுப்பும் நடத்துகிறோம். அவர்களிடம் கற்றுக்கொண்ட நுணுக்கங்களை இவர்கள் செய்முறையில் ஈடுபட வெளியிடங்களுக்கும் அழைத்து செல்வோம். இதன் பலனாக கடந்த மாதம், எங்களிடம் கடந்த பேட்ச் பெண் கலைஞர்கள் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் குறும்படங்களை வைத்து ‘‘கதைகள் பல காண’’ என்னும் தலைப்பில் கண்காட்சியினை நடத்தினோம்.

பொதுவாக ஒரு புகைப்படம் ஒரு கதையை சொல்ல வேண்டும். அதன் பேரில் கடந்த மாதம் எங்கள் குழு நடத்திய புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்ற அனைத்து புகைப்படங்களும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. அதில் புகைப்பட கலைஞர் ஜனனியின் போட்டோ சீரிஸ். கேன்சரால் பாதிக்கப்பட்ட அவரின் அம்மா, பள்ளி செல்லும் குழந்தைகள் எப்படி விடுமுறைக்காக காத்திருப்பார்களோ அதுபோல ஐஸ் வண்டிக்காக ஆர்வமாக காத்திருப்பது, ஐஸ் வண்டியினை பார்த்ததும் அவரிடம் தோன்றும் பரவசம் என அனைத்தையும் மிகவும் தத்ரூபமாக படம் பிடித்திருந்தார்’’ என்றவர் பயிற்சிக்காக பெண் கலைஞர்களை தேர்வு செய்யும் முறையினை விவரித்தார்.

‘‘இங்கு பயிற்சி பெற பலர் விண்ணப்பிப்பாங்க. நேர்முகத் தேர்வு மூலம் சந்தித்து பேசி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கலைஞர்களை தேர்வு செய்வோம். அவர்களுக்கு அந்த வருடம் போட்டோகிராபி, வீடியோகிராபி சம்பந்தப்பட்ட அனைத்தையும் சொல்லிக்கொடுப்போம். வர்க் ஷாப்கள், வகுப்புகள் இவையெல்லாம், தனித்தனியாகத்தான் சொல்லிக் கொடுக்கிறோம். மேலும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் புகைப்படம் மூலம் சமூகத்திற்கு சொல்லப்போகும் கருத்துக்களை தெளிவாக சொல்வதற்கு அவர்களுக்கென இடமும், வாய்ப்புகளும் முக்கியமாக சுதந்திரமும் கொடுப்போம். அந்த சுதந்திரம் அவர்களை மேலும் சிந்திக்கத் தூண்டும். எங்களிடம் பயிற்சி பெற வருபவர்களின் அனைவரின் வாழ்க்கையிலும் இந்தப் பயிற்சி ஒரு முக்கிய திருப்பமாக, வழிகாட்டியாக இயங்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்’’ என்று புன்னகையுடன் பதிலளித்தார் காயத்ரி.

ஜனனி-

‘‘பிறந்தது ஈரோட்டில் வெள்ளாங்கோவில் கிராமம். போட்டோகிராபி எனக்கு ரொம்ப பிடிச்ச துறை. இதைப் பற்றி முழுமையாக தெரிஞ்சிக்க விரும்பினேன். அப்போதுதான் இவங்களைப் பற்றி நண்பர்கள் மூலமாக தெரிந்து கொண்ேடன். எனக்கு இங்கு படிக்க வாய்ப்பும் கிடைச்சது. என்னுடைய இந்த துவக்கத்திற்கு என் வீட்டில் ரொம்பவே ஆதரவு கொடுத்தாங்க. இங்கு பயிலும் ஒவ்வொருவரின் கனவுகளும் மெய்ப்பட வேண்டும் என்பது மட்டுமில்லாமல் அவர்கள் காரியத்திலும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதனை சரியாக சொல்லிக் கொடுக்கிறார்கள். எனக்கு போட்டோகிராபி பிடிச்சதாக இருந்தாலும், பொதுவான சில விஷயங்கள் மட்டும்தான் எனக்கு தெரியும். ஆனால், சின்னச் சின்ன நுணுக்கங்களையும், போட்டோகிராபி பற்றிய புரிதலையும் கற்றுக் கொடுத்தது இந்த பயிற்சி மையம். இங்கு நான் படம் பிடித்த போட்டோ சீரிஸ் – என் அம்மா பற்றியது. காலிங்கராயன் அணைக்கட்டு குறித்தும் டாக்குமென்டரி எடுத்திருக்கேன்.’’

வர்ஷினி செந்தில்- ‘‘நான் படிச்சது எம்.எஸ்.சி விலங்கியல். கல்லூரி படிக்கும் போதே, போட்டோ, வீடியோ எடுப்பேன். அப்போதுதான் இவங்களைப் பற்றி தெரியவந்தது. விண்ணப்பித்து, ஒரு ஸ்டூடன்டா தேர்வும் ஆகிட்டேன். இங்க கேமரா எப்படி பிடிக்கணும் என்பது முதல் நாம் எடுக்கும் புகைப்படம், வீடியோக்கள் எல்லாம் எவ்வாறு எடிட் செய்யணும் என்பது வரைக்கும் அனைத்தும் கற்றுக் கொடுத்தாங்க.

அதற்காக அவங்க வெளியில் இருந்து வரவைத்த ஆலோசகர்களும், அறிவுரையாளர்களும் ஒரு முக்கிய காரணம். என்னதான் படிச்சிருந்தாலும், மற்றவர்களிடம் பேசும் போது எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கும். ஆனால் இங்கு சேர்ந்த பிறகு தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் அதிகரிச்சிருக்கு. இங்கு வெறும் போட்டோகிராபி சம்பந்தப்பட்டதை மட்டும் சொல்லித்தர மாட்டாங்க. ஒரு பெண், தன்னம்பிக்கையா, தனித்தன்மையா தெரியணும் என்பது குறித்தும் சொல்லிக் கொடுப்பாங்க. மதுரை கோயில் வீதியில் இருக்கும் தெரு வியாபாரிகள் பற்றி புகைப்படம் எடுத்திருக்கேன். கூத்தாடிச்சி என்ற ஒரு வகை தெருக்கூத்து பற்றி டாக்குமென்டரி படம் செய்திருக்கேன்.’’

புவனேஸ்வரி-

‘‘நான் சமூக வலைத்தளபக்கத்தில்தான் இவர்களை பார்த்தேன். இங்கு மாணவியா சேர்வதற்கு போட்டோகிராபி மேல் ஆர்வம் இருக்கணும். அதற்கான திறமை மற்றும் ஆர்வம், புரிதல் இருக்கான்னு பார்ப்பாங்க. அதன் அடிப்படையில்தான் தேர்வு செய்வாங்க. இங்கு வரும் வரை நான் இயற்கை, கல்யாணம் மற்றும் வீடுகளில் நடைபெறும் விசேஷங்கள் குறித்துதான் படம் பிடித்திருக்கேன். இங்கு வந்த பிறகுதான் போட்டோகிராபியில் உள்ள அடிப்படை விஷயங்கள் அனைத்தும் கற்றுக்கொண்டேன்.

கேமராவை கையாளும் முறை, போட்டோகிராபியின் வகைகள் என ஒவ்வொன்றையும் தெளிவாக சொல்லிக் கொடுத்தாங்க. என்னுடையது திருச்சி பக்கத்தில் இருக்கும் கிராமம் என்பதால், ஒரு பெண் இந்த துறையில் எப்படி என்ற எண்ணம் இருந்தது. ஆனால் நாளடைவில் என் ஆர்வத்தை பார்த்து என் வீட்டில் எனக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சாங்க. என்னை பொறுத்தவரை போட்டோகிராபி துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்க வேண்டும். என்னுடைய எதிர்கால திட்டமும் அதுதான். அதற்கான முயற்சிகளை கண்டிப்பாக எடுப்பேன். கண்காட்சியில் மீனவர்கள், மீனவப் பெண்கள் மற்றும் கடல்களை சார்ந்து புகைப்படம் இடம் பெற்றிருந்தது. 50 வயதில் ஆர்கானிக் விவசாயம் செய்யும் பெண்மணி குறித்து டாக்குமென்டரி எடுத்தேன்.’’

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post கனவு மெய்ப்பட வேண்டும்! appeared first on Dinakaran.

Tags : Kungum Dothi ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!