×

ஜிபிஎஸ் மூலம் முறைகேடு கண்டுபிடிப்பு 40 குடிநீர் வாரிய லாரிகள் ஒப்பந்தம் அதிரடி ரத்து: சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை

சென்னை: ஜிபிஎஸ் மூலம் கண்காணித்ததில் முறைகேட்டில் ஈடுபட்ட 40 குடிநீர் வாரிய லாரிகள் சிக்கின. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் ஒரு கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நீர் ஆதாரங்கள் சென்னையை சுற்றியுள்ள 5 ஏரிகளில் இருந்து கிடைக்கிறது. மேலும் மாற்று வழிகள் மூலமும் சென்னை மக்களுக்கான குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகர பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோக்கப்படுகிறது. இதில் சில பகுதிகளுக்கு அழுத்தம் குறைவால் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதில்லை. அதுபோன்ற பகுதிகளுக்கு சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது 480 லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் குடிநீர் விநியோகித்து வருகிறது.

ஆனால், வணிக தேவைகளுக்கு, சென்னை குடிநீர் வாரிய லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிப்பதில்லை. ஆனால், அதை எல்லாம் மீறி ஒப்பந்த லாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இந்த லாரிகளை கண்காணிக்க உயர் அதிகாரியின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக கண்காணித்ததில், வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் தேவைகளுக்கு குடிநீர் வாரிய லாரிகள் குடிநீரை விற்றது ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்ததில் கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை மொத்தம் 40 குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் அந்த லாரிகளின் ஒப்பந்தத்தை ரத்து செய்து சென்னை குடிநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.  

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘எந்த வகையிலும் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பதிவு செய்த இடங்கள் தவிர வேறு இடங்களுக்கு சம்பந்தப்பட்ட லாரிகள் சென்றாலும், குடிநீரை ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு விற்றாலும் ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்து விடலாம். இனிமேல் இதுபோன்ற முறைகேடுகளில் ஒப்பந்த லாரிகள் ஈடுபட முடியாது. அவ்வாறு ஈடுபட்டால் நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படும். தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்ட 40 லாரிகளுக்கு பதிலாக புதிய டெண்டர் போடப்பட்டு புதிய லாரிகள் இணைக்கப்பட்டு வருகிறது’’ என்றார்கள்.


Tags : GPS Abuse Detection 40 Drinking Water Board Trucks Contract Action Canceled: Chennai Drinking Water Board Action
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...