தாரமங்கலம் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது-பெற்றோர்கள் முற்றுகையால் பரபரப்பு

மேச்சேரி : தாரமங்கலத்தில், தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியராக மேட்டூரை சேர்ந்த விஜயகுமார்(47) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, தலைமை ஆசிரியர் விஜயகுமார், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தன. அவரது தொல்லையை தாங்க முடியாததால், மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இதுபற்றி நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று புகார் மனு அளித்தனர். மேலும், ஒருசில மாணவிகளின் உறவினர்கள், பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரை தாக்க முயன்றனர். இதனால், பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ஓமலூர் டி.எஸ்.பி., சங்கீதா, தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உமாமகேஸ்வரி ஆகியோர், நேற்று பள்ளிக்கு நேரில் ெசன்று விசாரணை நடத்தினர். அவர்கள், பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆகியோரிடம், தனித்தனியே விசாரணை நடத்தினர்.

இதில், மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது. மேலும், பள்ளி ஊழியர்களை ஜாதி பெயரைச் சொல்லி அவர் அழைத்து வந்ததும் தெரியவந்தது. இதனிடையே, பள்ளியில் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்த வந்திருப்பதை அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்கள், தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர், தலைமை ஆசிரியர் விஜயகுமாரை கைது செய்த போலீசார், அவரை விசாரணைக்காக ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, தலைமை ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்ட தகவலை அறிந்த சிலர், அவரது படத்துடன் கூடிய துண்டுபிரசுரத்தை அச்சடித்து ஆங்காங்கே ஒட்டினர். இந்த சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: