×

மாநகர் போக்குவரத்துக்கழகம் அரசுக்கு பரிந்துரை பஸ்சுல சவுண்டா பாட்டு கேட்க தடை போடுங்க... பயணிகளுக்கு வருகிறது கட்டுப்பாடு

சென்னை: எம்டிசி பஸ்களில் பயணம் செய்யும் மக்கள் மொபைல் போன்களில் அதிக ஒலியுடன் பாடல் கேட்பதை தடை விதிக்க தமிழக அரசுக்கு மாநகர் போக்குவரத்துக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணிக்கும் போது, பெரும்பாலான பயணிகள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்துவோரில் சிலர் தங்களிடம் உள்ள செல்போனில் படம் பார்ப்பது, சினிமா பாடல்களை கேட்பது, செய்திகளை பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற பல்வேறு விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் அப்போது அவர்கள் அதிக ஒலியை வைக்கிறார்கள். இதன் மூலம் ஒலி மாசு ஏற்பட்டு, சக பயணிகளுக்கு இடையூறு உருவாக்குகிறது. எனவே இதனை தடுக்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் சமூக ஆர்வலர் ஒருவர் மாநகர் போக்குவரத்துக்கழகத்துக்கு மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘பேருந்துகளில் உடன் பயணிக்கும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது போன்றவற்றிற்கு கர்நாடக அரசு போக்குவரத்துக்கழகத்தை போல், தமிழக அரசு போக்குவரத்துக்கழகமும் தடை விதிக்க வேண்டும்’ எனக்கூறப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக்கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘கர்நாடக மாநிலத்தில் அரசு செய்ததைப் போல, பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் மொபைல் பேச்சு, பாடல்கள் மற்றும் வீடியோ கேம்களை சத்தமாக பார்ப்பதை தடைசெய்து கட்டுப்படுத்த வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். இந்நிலையில் பயணிகளுக்கு இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிப்பது பொது போக்குவரத்தில் செல்லும்போது செல்போனை இயர்போன் மூலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு கர்நாடக அரசு எடுத்தது போல் தமிழக அரசும் முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இதுபோன்ற புகார்கள் சென்றதன் காரணமாக புறநகர் பஸ்களில் செல்போனில் அதிக ஒலியுடன் சினிமா பாடல்கள் கேட்பது, படம் பார்ப்பது போன்றவற்றிற்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் புறநகர் பஸ்களில் பயணிக்கும் பயணிகள், தங்களின் செல்போனில் அதிக ஒலியை வைத்து சினிமா பார்ப்பது, செய்திகளை பார்ப்பது, பாடல்களை கேட்பதாகவும், அதனால் ஒலி மாசு ஏற்பட்டு சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.

இதன் காரணமாக பயணிகள் தங்களின் செல்போன்களில் அதிக ஒலியை வைத்து சினிமா பாடல்கள் உள்பட எந்த வகையான காட்சிகளையும் பார்க்க தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு யாராவது அதிக ஒலியுடன் சினிமா பாடல்களை கேட்பது தெரியவந்தால், உடனடியாக நடத்துனர், அந்த பயணியிடம் சென்று இதுகுறித்து எடுத்துக்கூற வேண்டும். அதை கேட்காவிட்டால் அந்த பயணியை பஸ்சை நிறுத்தி கீழே இறக்கிவிட வேண்டும். அவர் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் கேரளாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Bailiff , Bailiff's recommendation to the government to ban the listening to the song Pasula Sounda ... Control is coming to the passengers
× RELATED மாநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு செல்லூர் ராஜூ விருப்ப மனு