×
Saravana Stores

‘ஏம்மா வரியா.... உன்னை தான்... வரியா’ பெண் காவலரை சைகை மூலம் அழைத்து தொந்தரவு: வாலிபர் கைது

சென்னை: மத்திய கைலாஷ் அருகே நின்று இருந்த பெண் காலவரை பாலியல் ரீதியாக சைகை மூலம் அழைத்த வாலிபரை போலீசார் பெண்களுக்கு எதிரான தடுப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வடநெம்மேலி பகுதியை சேர்ந்தவர் ஷர்மிலி (32). காவலரான இவர், தாம்பரம் மாநகரத்திற்கு உட்பட்ட கானத்தூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். தாம்பரம் உதவி கமிஷனர் ரவிக்குமார் தாய் மகாலட்சுமி (79) உடல் நலக்குறைவால் மத்திய கைலாஷ் அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மகாலட்சுமியை மருத்துவமனையில் பார்த்து கொள்ள வாய்மொழி உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை காவலர் ஷர்மிலி நேற்று பணியில் ஈடுபட்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு அவரை மாற்றுவதற்காக தாம்பரம் ஆயுதப்படை காவலர் சரவணன் வரவேண்டும். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக சரவணன் மருத்துவமனைக்கு வருவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தன்னை மாற்றுவதற்காக வரும் காவலர் சரவணனுக்காக மருத்துவமனை நுழைவாயில் முன்பு காவலர் ஷர்மிலி இரவு 8.30 மணிக்கு காத்திருந்தார். அப்போது, அந்த வழியாக மொபட்டில் வந்த வாலிபர், மருத்துவமனை நுழைவாயில் முன்பு பெண் ஒருவர் நிற்பதை பார்த்து ‘ஏம்மா வரியா.... உன்னை தான்.... வரியா’ என்று அழைத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் காவலர் அச்சத்தில் மருத்துவமனைக்குள் சென்றுவிட்டார். பிறகு 5 நிமிடம் கழித்து மீண்டும் தன்னை மாற்றுவதற்கு வரும் காவலர் சரவணனுக்காக மருத்துவமனை நுழைவாயில் முன்பு வந்தார்.அப்போது, மீண்டும் அந்த வாலிபர் பெண் காவலர் அருகே வந்து ‘வரியா...வரியா... கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பெண் காவலர், ‘ஏண்டா உனக்கு யார் யாரென தெரியாதா.... எல்லாரையும் இப்படி தான் கூப்பிடுவியா’ என திட்டியுள்ளார். அந்த நேரத்தில் பெண் காவலரை மாற்றுவதற்காக ஆயுதப்படை காவலர் சரவணன் அங்கு வந்தார். உடனே பெண் காவலர் நடந்த சம்பவத்தை அவரிடம் கூறி வேதனைப்பட்டார். உடனே காவலர், பெண் காவலரை பாலியல் ரீதியாக சைகை மூலம் அழைத்த வாலிபரிடம் இப்படி செய்யலாமா, பெண் காவலரிடமே இப்படி நடந்தது தவறு என்று கூறி மன்னிப்பு கேட்க கூறியுள்ளார்.

அதற்கு அந்த வாலிபர், நான் அப்படி தான் அழைப்பேன் என்று கூறி செல்போன் மூலம் தனது நண்பர்களான உதயகுமார், பழனிசாமி ஆகியோரை அழைத்து காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காவலர், தவறாக நடக்க முயன்ற வாலிபரின் செல்போன் மற்றும் அவர் ஓட்டி வந்த மொபட் சாவியை பிடுங்கி மத்திய கைலாஷ் சிக்னலில் நின்று இருந்த போக்குவரத்து போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி ஒப்படைத்தார்.பின்னர் சம்பவம் குறித்து பெண் காவலர் ஷர்மிலி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் தவறாக சைகை காட்டிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை கலிக்குன்றம் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (29) என்று தெரியவந்தது. மேலும், பணியில் இருந்த பெண் காவலரை தவறாக அழைத்து தொந்தரவு செய்ததும் உறுதியானது. அதைதொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் பிடிபட்ட வாலிபர் விக்னேஷ் மீது ஐபிசி 332, 353 மற்றும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மத்திய கைலாஷ் அருகே பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Emma Variya ,Variya ,Valipar , ‘Emma Variya .... you are ... Variya’ harassing the female police officer by gesturing: Valipar arrested
× RELATED உதயமார்த்தாண்டபுரத்தில் தூர்...