×

முதலீட்டாளர்கள் அதிர்ச்சி எல்ஐசி பங்கு விலை கடுமையான வீழ்ச்சி: ரூ5 லட்சம் கோடிக்கு கீழ் சந்தை மதிப்பு சரிவு

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி.யின் பங்கு விற்பனை விலை கடுமையான வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, அதன் சந்தை மதிப்பு  ரூ5 லட்சம் கோடிக்கும் கீழ் சரிவடைந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி, அதன் மூலம் வருவாய் ஈட்டுவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எல்ஐசி நிறுவன பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக சுமார் ரூ21,000 கோடி திரட்ட 3.5 சதவீத பங்குகளுக்கான ஐபிஓ-க்கள் வெளியிடப்பட்டன. ஒரு பங்கின் விலை ரூ902 முதல் ரூ949 வரை நிர்ணயிக்கப்பட்டது. கடந்த மாதம் 4ம் தேதி பங்கு விற்பனை தொடங்கியது பொது பங்கு விற்பனை 9ம் தேதி முடிந்தது. இந்திய பங்குச்சந்தையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் கடந்த மாதம் 17ம் தேதி பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட தினமே எல்ஐசி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தொடர் சரிவை சந்தித்து வந்த எல்ஐசி பங்குகளின் விலை நேற்று ஒரே நாளில் எல்ஐசி பங்கின் விலை ரூ23 வரை குறைந்து ரூ775க்கு விற்பனையானது. ஒரு பங்கின் விலை ரூ949க்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதன் தற்போதைய விலை ரூ174 வரை சரிந்துள்ளது. இதனால், ரூ6 லட்சம் கோடியாக இருந்த எல்ஐசியின் சந்தை மதிப்பு தற்போது ரூ4.94 லட்சம் கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

Tags : Investors shocked by sharp fall in LIC share price: Market value plummets below Rs 5 lakh crore
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...