×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மக்களுக்கு நீராதாரமாக விளங்கி நுங்கு நுரையாக பொங்கி வந்த பாலாற்றில் கழிவுநீர் கலந்து பாழாகும் அவலம்

வேலூர் : வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு நீராதாரமாக விளங்கி நுங்கு நுரையாக பொங்கி வந்த பாலாற்றில் கழிவுநீர் கலந்து பாழாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் பகுதியில் உருவாகும் பாலாறு, ஆந்திரா மாநிலத்தைக் கடந்து வேலூர் வழியாக தமிழகத்திற்குள் 222 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாய்ந்தோடியது.

அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டியதால், பாலாற்றில் நீர்வரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாலாறு வறண்டு பாலைவனமாக காட்சியளித்தது. போதாக்குறைக்கு தோல்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் பாலாற்றில் கலந்து பாழானது. இரவு பகல் பாராமல் நடந்த மணல்கொள்ளையால் பாலாறு ராட்சத பள்ளங்களுடன் காட்சியளித்தது.

இப்படி பாலாறு பாழாகி வந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர மாநில எல்லைகளில் பெய்த மழையால் பாலாற்றில் நீர் வரத்து தொடங்கியது. இந்நிலையில், கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக பாலாற்றில் பேத்தமங்கலம் அணை நிரம்பியது.  இதனால் அணையில் உள்ள 14 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே ஆந்திராவிலும் கனமழை பெய்ததால், பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்தது.

கடந்த நவம்பர் மாதம் ஒரு லட்சம் கனஅடி நீர் வரத்து தொடங்கியது. பாலாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பல இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன் உடைப்பு ஏற்பட்டது. மேலும் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. அதோடு பாலாற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பாலாற்றில் நீர்வரத்து முற்றியிலும் நின்றது. கடந்த மாதம் புயல் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் தமிழக- ஆந்திர வனபகுதியில் கனமழை பெய்தது. இதனால் குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பி உபரி நீர் வெளியேறியது. மேலும் பாலாற்றில் நீர்வரத்து மீண்டும் தொடங்கியது.

பாலாற்றில் பல ஆண்டுகளாக வெள்ளம் வராமல் வறண்டு பாழடைந்து கிடந்த நிலையில் சமீபத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். பாலாற்றுக்கு திரண்டு வந்து வெள்ளம் பாய்ந்தோடுவதை பார்த்து ரசித்தனர். ஆனால் தற்போது தெளிந்த நீரோடைபோல் வரும் பாலாற்று வெள்ளத்தில் கழிவுநீர் கலப்பது மட்டும்  நிற்கவில்லை. பாலாற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் இருந்தும்,  தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக பாலாற்றில்  விடப்பட்டு பாழாக்கி வருகின்றனர்.

 இதனால் தெளிந்த நீரோடைபோல் வரும் தண்ணீர் வேலூரில் கழிவுநீர் கலந்து கருப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. அதோடு நிலத்தடி நீர்மட்டம்  பாதிப்படைகிறது.  கருமை நிறத்தில் கழிவுநீரில் இருந்து நுரை பொங்கி  வரும் பாலாற்று நீரில் சிறுவர்கள் குளித்து நோய்  பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இப்படி பாலாறு ஒரு புறம் ஆக்கிரமிப்பு,  கழிவுநீர் கலப்பது, நிலத்தடி நீர் பாதிப்படைவது என்று பாழாகி வருவதை தடுக்க  பொதுப்பணித்துறையும், நீர்வளத்துறையும், காவல்துறையும் இணைத்து பாலாற்றை  மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தூய்மையாக பராமரிக்க வேண்டும்

வறண்டு பாலைவனமாக காட்சியளித்த பாலாற்றின் குறுக்கே 5 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்ைக எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி தடுப்பணை கட்ட வேண்டும். இதன்மூலம் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறும் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், பாலாற்றில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை தடுத்து பாலாற்றை தூய்மைப்படுத்த வேண்டும்.

புற்றீசல் போல் முளைக்கும் ஆக்கிரமிப்புகள்

வேலூர் பாலாற்றில் கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் இரு கரைகளையும் தொட்டபாடி மழை வெள்ளம் பாய்ந்தோடியது. இதில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளும் அடித்துச்செல்லப்பட்டது. தற்போது தண்ணீர் வற்றத்தொடங்கியதால், மீண்டும் பாலாற்றில் ஆக்கிரமிப்புகள் தொடங்கியுள்ளது. வேலூரில் பாலாற்றுக்குள்ளேயே ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி வருகின்றனர். ஆனால் இவற்றை கண்டுகொள்ளாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தில் உள்ளனர். ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாறு கரைகளை அமைக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டம் ெதாடங்கி ராணிப்பேட்டை மாவட்டம் வரையில் நீண்டுகொண்டே போகும் பாலாற்றின் இரு புறமும் கரைகளை கட்டி பலப்படுத்தினாலே ஆக்கிரமிப்புகள் இருக்காது. மணல் கொள்ளை உள்ளிட்ட எந்த விதமான சமூகவிரோத செயல்களும் இருக்காது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : Vellore ,Tirupati ,Ranipettai , It is a pity that sewage is mixed in the lake which was overflowing with foam
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...