×

மு.க.ஸ்டாலின் ஆட்சி மகிழ்ச்சியை தருகிறது; கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்த கலைஞர் கருணாநிதி 99வது பிறந்தநாள் விழா, முதல் முறையாக அரசு விழாவாகவும், மக்கள் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. தமது வாழ்வில் 80 ஆண்டுகாலம் கலை, எழுத்து, அரசியல் மற்றும் ஆட்சி பொறுப்புகளில் தனித்துவமிக்க ஆளுமையை வெளிப்படுத்தியவர் கலைஞர். தமது அரசியல் வாழ்க்கையில்  எப்போதும் எதிர்நீச்சல் போட்டவர்.

எழுத்தாளராக, வசனகர்த்தாவாக, பேச்சாளராக, கட்சியின் தலைவராக, முதலமைச்சராக, அரசியல் வியூகம் வகுக்கும் ஆற்றல்மிக்கவர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞரை போல முன்னொருவரில்லை, பின்னொருவரில்லை. எந்த முடிவெடுத்தாலும் தொலைநோக்கு பார்வையோடு உறுதியாக எடுத்து அரசியல் களத்தில் வெற்றிகளை குவித்தவர். தமிழ் சமுதாயத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதிக் காவலராக விளங்கியவர். கலைஞரிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், நிர்வாக பயிற்சி பெற்று இன்றைக்கு தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அனைவரும் போற்றுகிற வகையில் மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சியின் மூலம் எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

ஓராண்டில் பத்தாண்டுகால பணிகளை செய்து முடித்து சாதனை படைத்திருக்கிறார். கலைஞர் காட்டிய வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி பீடுநடை போடுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. கலைஞர் புகழ் தமிழ் கூறும் நல்லுலகத்தில் தொடர்ந்து நிலைத்திட அவர் பிறந்தநாளில், வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மனப்பூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

Tags : K. Stalin , MK Stalin's rule brings happiness; Report by KS Alagiri
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற...