வியாசர்பாடியில் அனுமதியின்றி நடத்திய குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 5 சிறுமிகள் உள்பட 7 பேர் மீட்பு

பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 5 சிறுமிகள் உட்பட 7 பேர் மீட்கப்பட்டனர். சென்னையில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை முறையாக பாதுகாக்க முடியாத சூழலில் அவர்களை காப்பகத்தில் தங்க வைக்கின்றனர். இதற்காக காப்பகத்துக்கு மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துகின்றனர். குழந்தைகள் காப்பகம் நடத்துபவர்கள் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு முறைகளை அரசு வகுத்துள்ளது. அவற்றை  சில காப்பகங்கள் காற்றில் பறக்க விடுவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில், வியாசர்பாடியில் உள்ள ஒரு காப்பகத்தில் முறையான அனுமதி இல்லாமல் குழந்தைகளை தங்க வைத்துள்ளதாகவும், உரிய பாதுகாப்பு இல்லை எனவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே சம்பந்தப்பட்ட காப்பகத்துக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி, குழந்தைகள் அமைப்பை சேர்ந்த ராஜேஸ்வரி, குழந்தைகள் நல குழும உறுப்பினர் காருண்யா தேவி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அங்கு, சிறிய இடத்தில் கஷ்டத்துக்கு இடையே 2 சிறுவர்கள், 5 சிறுமிகள் அமர்ந்து கொண்டிருந்தனர். மேலும் சிறுவர், சிறுமிகளுக்கு தனித்தனியாக இடம் இல்லாமல் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மேலும் சமையலறையில் கேஸ் சிலிண்டர் தரையில் வைத்து உரிய பாதுகாப்பு இல்லாமல் சமைத்து வந்தனர். சிறுமிகளை  பராமரிப்பதற்கு தனியாக ஆட்கள் இல்லை. 2வது மாடியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார். இதுபற்றி காப்பக உரிமையாளரிடம் விசாரித்தபோது, ‘எங்களது உறவினர்’ என்று கூறியுள்ளனர்.

எந்த ஒரு தெளிவான பதிலையும் அவர்கள் கூறவில்லை. காப்பகத்திற்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் நடத்தி வந்ததும் தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நல அலுவலர்கள், அங்கிருந்த 5 சிறுமிகள் உட்பட 7 பேரையும் மீட்டனர். சிறுமிகளை கெல்லீசில் உள்ள அரசு காப்பகத்திலும், சிறுவர்களை ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்திலும் சேர்த்தனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி, வியாசர்பாடி போலீசில் புகார் செய்தார். அதில், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் அனுமதியின்றி காப்பகத்தை நடத்தியதாகவும் அங்கு குழந்தைகளுக்கு எந்த ஒரு முறையான பாதுகாப்பு வசதிகளும் செய்து தரவில்லை எனவும், காப்பக உரிமையாளர் உமா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: