×

தொடர் விபத்துகளை தவிர்க்கும் வகையில் புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்

சென்னை: தொடர்ந்து ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும், என  தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தியுள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி  வைஷ்னவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களாக சென்னை உள்ளூர்/ புறநகர்/ பறக்கும் ரயில்களில் பயணிப்பவர்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பது மற்றும் படுகாயமடையும் செய்திகள் வந்த வண்ணம் இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியதாகும். கடந்த மே மாதம் 27ம் தேதியிட்ட நாளிதழில் வெளிவந்த கட்டுரையில், மத்திய சென்னை தொகுதியில் உள்ள மாநில கல்லூரியில் 2ம் ஆண்டு பொருளாதாரம் பயிலும் 19 வயது மாணவன் கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போது, வேப்பம்பட்டு மற்றும் செவ்வாய்ப்பேட்டை ரயில் நிலையத்திற்கு இடையே மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார் என்றும், அவர் ரயிலின் படியில் பயணம் செய்தது தான் விபத்துக்கு காரணம் என்றும் காவல் துறையினர் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், மீஞ்சூர் ரயில் நிலையத்தில், புறநகர் ரயிலில் ஏறும்போது தண்டவாளத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் காயமடைந்ததாக கடந்த மே மாதம் 15ம் தேதி நாளிதளில் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக மார்ச் மாதம், பெரம்பூர் மற்றும் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திற்கு இடையே செல்லும் புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து 19 வயது கல்லூரி மாணவன் இறந்து விட்டதாகவும், அவரது நண்பர் படுகாயமடைந்ததாகவும் செய்திகள் வந்தன. இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது முதல் முறை அல்ல. இதேபோல் கடந்த 2018ம் ஆண்டில் கூட சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்த போது பரங்கிமலை மேம்பாலத்தில் உள்ள இரும்பு தூணில் மோதி இருவர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த நாளே பரங்கிமலை ரயில் நிலையத்தில் படியில் பயணம் செய்து வந்த 4 பேர் சுவரில் மோதி உயிரிழந்ததோடு, 7 பேர் படுகாயமடைந்தனர்.

புறநகர் ரயில்களில் இதுபோன்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்பை தவிர்ப்பதற்கும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும் ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகள் பொருத்துவது தான் சிறந்த தீர்வாக இருக்கும் என்ற அடிப்படையில், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி அன்றே, அன்றைய ரயில்வே துறை அமைச்சராக இருந்த பியூஸ் கோயலிடம் சென்னையின் அனைத்து உள்ளூர்/ புறநகர்/ பறக்கும் ரயில்களிலும் தானியங்கி கதவுகள் அமைப்பது தொடர்பாக கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தேன். எனவே இப்பிரச்னையை கவனத்தில் கொண்டு சென்னையின் அனைத்து புறநகர் ரயில்களிலும் விரைந்து தானியங்கி கதவுகள் அமைத்து தந்து ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அது குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவதோடு, இப்பிரச்னைக்கான தீர்வை விரைந்து படுத்திடுவீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dayanidhi Varan , Automatic doors should be installed on suburban trains to avoid a series of accidents: Dayanidhi Maran MP insisted
× RELATED குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்...