×
Saravana Stores

சிறகை விரி வானில் பற!

நன்றி குங்குமம் தோழி

‘‘சாதனைகளோடு சரித்திரம் படைக்கக் கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம் தான் பெண்கள்” என்று கூறும் சமூக ஆர்வலர் எலிசபெத், 18-60 வயதுள்ள பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், குழந்தை திருமணம் செய்து கொண்டவர்கள், ஆதரவற்றவர்கள், விதவைகள் போன்ற பெண்களுக்கு வாழ்க்கைக்கான உத்தரவாதத்தினை அளிப்பதோடு அவர்கள் வாழ்வை மேம்படுத்தியும் வருகிறார்.

“சொந்த ஊர் பழவேற்காடு. 12ம் வகுப்பு முடித்ததுமே வீட்டில் திருமணம் செய்து வச்சுட்டாங்க. அதுதான் என் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. என் கணவர் கொடுத்த உத்வேகத்தினால் மேல்படிப்பை முடித்தேன். இரண்டு குழந்தைகள் ஆன பிறகும் சட்டம் படித்துக் கொண்டே வேலையும் தேடினேன். அந்த நேரத்தில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ‘யுனிவர்சல் மேன்பவர்’ நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த நிறுவனம் மூட வேண்டிய சூழல் ஏற்பட்டதால், ‘இதை நீயே எடுத்து நடத்திறியா’ என்று அதன் அதிகாரி ஜெய வீர பாண்டியன் கேட்டார். அதைப் பற்றி முழுமையா ஏதும் தெரியவில்லை என்றாலும், ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பு மட்டும் என்னுள் இருந்தது.

பொதுவாக நம் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் வேலை வாங்கி கொடுப்பதே ஒரு சாதனை. அதிலும் பெண்கள் நலன் கருதி  படிப்பறிவு இல்லாதவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள் என ஏராளமான பெண்களுக்கு உரியச் சம்பளத்துடன் வேலை வாய்ப்பை எங்க நிறுவனம் மூலம் அமைத்துக் கொடுக்கிறோம். அதோடு நில்லாமல் எது வரை அவர்கள் வேலை செய்கிறார்களோ அதுவரை அவர்களுக்கான பாதுகாப்புகளையும், வசதிகளையும் உறுதிப்படுத்துகிறோம். 2002ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளோம். மூன்று மணி நேர வீட்டு வேலைக்கு மாத சம்பளம் ரூ.6,000, 8 மணி நேர வேலைக்கு ரூ.15,000 வரை பெற்றுத் தருகிறோம்.

கொரோனா காலத்தில் கூட வேலையின்றி தவித்த சுமார் 400 பெண்களுக்கு கார்ப்ரேஷன் மூலமாக வேலை வாய்ப்புகளை ஏற்பாடு செய்தோம். 17ஆண்டுகளுக்கு மேல் வேலை தேடித் தரும் நிறுவனத்தை நடத்தி வரும் எனக்குப் பல போட்டியாளர்களும் உள்ளனர். சமையல் வேலை, வீட்டோடு தங்கிச் செய்யும் வீட்டு வேலை, முதியோரைப் பராமரிக்க நர்ஸ் வேலை… என்று அவர்களுக்கு ஏற்றார் போல் அமைத்துக் கொடுக்கிறோம். வேலை தேடி வரும் பெண்களிடம் பணம் வாங்குவது கிடையாது.

வேலை கொடுப்பவர்களிடம் ஒப்புதல் பெற்று பணம் வாங்கப்படும். அதேபோல் எங்களிடம் வேலை தேடி வருபவர்களிடம் எந்தெந்த வேலை தெரியும் என்று கேட்டுக் கொண்டு அதற்கேற்றார் போல் வேலைகளை ஏற்பாடு செய்கிறோம்.  சென்னை  மட்டுமின்றி டெல்லி, ஹைதராபாத் போன்ற வெளியூர்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் வீட்டு வேலைகள் உள்ளிட்ட பணிகள் செய்வதற்காகப் பெண்களை அனுப்பி வைக்கிறோம். வீடுகளில் தங்கி பணிபுரியும் பெண்களுக்கு கட்டாயம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை  விடுமுறை தர வேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் ஒப்பந்தம் செய்வோம்” என்று கூறுகிறார் எலிசபெத்.

பெண்களுக்கு  ஏதேனும் புகார் வந்தால் காவல் துறை உதவியுடன் அதைச் சரி செய்து கொள்ளும் எலிசபெத், வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில் எந்த வித தவறான பெயரும் எடுக்கக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார். “பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வருவார்கள். அதில் சிலர் தங்கள் குழந்தைகளுடனும் இருப்பார்கள். அப்படி குழந்தைகளுடன் வருபவர்களில், எங்களின் முதல் கவனம் அந்த குழந்தைகள் மீதே. அந்த பெண்ணின் உறவினர்கள் பார்த்துக் கொண்டால் அவர்களிடம் ஒப்படைப்போம் அல்லது விடுதிகளில் சேர்ப்போம். அவர்களுக்கான கல்வி வழிகாட்டுதலை வழங்கி தாயின் நிலை அந்த குழந்தைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

குடும்ப சூழ்நிலை காரணமாகச் சிறு வயதிலேயே வீட்டைவிட்டு வரும் பெண்களுக்கு ஆலோசனை கொடுத்து அனுப்பி வைக்கிறோம். 18 வயதிற்குக் கீழ் உள்ள எவரையும் வேலைக்கு அமர்த்துவதில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். சிறு வயதிலேயே படிப்பிற்காக பல கஷ்டங்கள் சந்தித்த நான், என்னைப் போல எந்த பெண்ணும் கஷ்டப்படக் கூடாது என்று நினைத்தேன்.

ஒரு பெண்ணாக இந்த அளவிற்கு வந்திருக்கிறேன் என்றால் என்னை வழி நடத்திய என் அம்மாவிற்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய வரும் காலங்களிலும் ஆதரவற்றவர்களுக்கும், முதியோர்களுக்கும் ஓர் இல்லம் அமைத்து அவர்களுக்கு உதவ ஆசைப்படுகிறேன்” என்கிறார் எலிசபெத்.

தொகுப்பு: ஆனந்தி ஜெயராமன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : sky ,
× RELATED தமிழகத்தில் முதல் முறையாக...